தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர் ஹரி. இவர் தமிழ் திரையுலகில் பணியாற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவரது தந்தை மளிகை கடை நடத்தி வந்துள்ளார். பின்னர் குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார் ஹரி.
சினிமாவில் ஆர்வம் கொண்ட இயக்குனர் ஹரி ஆரம்பத்தில் செந்தில்நாதன், ஜீவபாலன், அமீர்ஜான், கே. நட்ராஜ், அலெக்ஸ் பாண்டியன், கே. பாலசந்தர் போன்றோருக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, அல்லு அர்ஜுனா’ ஆகிய திரைப்படங்களில் இயக்குனர் சரணுக்கு இணை இயக்குனராக பணியாற்றினார் ஹரி.
2002 ஆம் ஆண்டு பிரஷாந்த் மற்றும் சிம்ரனை வைத்து ‘தமிழ்’ என்ற படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹரி. அடுத்து விக்ரமை வைத்து ‘சாமி’ திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக இருந்தது. 16 கோடிக்கு மேல் வசூலித்து வசூல் சாதனையும் படைத்தது. தனது இரண்டாவது படமான ‘சாமி’ வெற்றியடைந்ததை அடுத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் ஹரி.
தொடர்ந்து ‘கோவில்’ (2004), ‘அய்யா’ (2005), ‘தாமிரபரணி’ (2007), ‘சிங்கம் திரைப்பட தொடர்’ (2010-2017) போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார் ஹரி. இவரின் படங்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களை சுற்றியே அமைந்திருக்கும். மேலும் சண்டை காட்சிகளில் அரிவாள் இடம்பெற்றிருக்கும். குடும்ப பாங்கான படங்களை எடுப்பதில் ஹரி வல்லவர்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட ஹரி, நாம் ஒன்றை நினைத்து படம் எடுப்போம், ஆனால் அதற்கு பல்வேறு விமர்சனங்கள் வரும். அந்த விமர்சனங்களை அறிவுரையாக எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த படங்களை இயக்கும் போது திருத்திக்கொள்ள வேண்டும். அதை விட்டுட்டு மக்களுக்கு ஒன்றும் தெரியவில்லை, என் கதை அவங்களுக்கு புரியல அப்படினு எல்லாம் சொல்லக் கூடாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார் இயக்குனர் ஹரி.