நாசர் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர். இவரது முழுப்பெயர் நாசர் முஹம்மது ஹனீஃப் என்பதாகும். தமிழ் சினிமாவில் நடிகர், வில்லன், துணை, குணச்சித்திர நடிகர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பெங்காலி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நாசர். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக பணியாற்றியவர். கவிதை மற்றும் கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் நாசர். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் திரையுலகில் நடித்துள்ளார் நாசர்.
1985 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தரின் ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நாசர். 1987 ஆம் ஆண்டு ‘கவிதை பாட நேரமில்லை’ படத்தில் நாயகனாக நடித்தார். 1989 ஆம் ஆண்டு ‘நாயகன்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் நாசர். இப்படம் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து ‘ரோஜா’, ‘தேவர் மகன்’, ‘பம்பாய்’, ‘குருதிப்புனல்’, போன்ற எண்ணிலடங்கா வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் நாசர். பாகுபலி பாகம் 1 மற்றும் 2ஆம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார் நாசர். வில்லன் கதாபாத்திரங்களில் அபாரமாக நடிப்பவர் நாசர்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட நாசர், சினிமா அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், நான் ஆரம்பத்தில் இந்திய விமான படையில் பணியாற்றி கொண்டிருந்தேன். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், அந்த வேலையை விட்டுவிட்டு வரும்படி என் அப்பா கூறினார். அதனால் விமான படையில் பணிக்கு சேர்ந்து ஒரு வருடத்திற்குள் சினிமாவில் நடிப்பதற்காக வேலையை விட்டுவிட்டு வந்துட்டேன் என்று கூறியுள்ளார் நாசர்.