மீண்டும் பள்ளியில் தலைதூக்கிய சாதி மோதல்.. இரு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சக மாணவர்கள்

நெல்லை நாங்குநேரி சம்பவத்தை தமிழ்நாடு இன்னும் மறக்காத சூழ்நிலையில் அடுத்து ஓர் சம்பவம் மீண்டும் பள்ளியில் சாதி என்ற பெயரில் முளைத்து வன்முறை வரை வளர்ந்திருக்கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் சின்னத்துரை என்ற மாணவர் மீதும் அவர் தங்கை மீதும் உடன் பயிலும் பள்ளி மாணவர்கள் இரவில் வீடு புகுந்து அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் பள்ளி மாணர்களிடையே சாதி விரோதப் போக்கு வளர்ந்து வருவதை உறுதி செய்தது.

தற்போது மேலும் ஒரு பேரிடியாக அதே நெல்லை மாவட்டம் நாங்கு நேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மருதகுளத்தில் செயல்பட்டுவரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென மாணவர்களிடையே மோதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் பொன்னாகுடியைச் இரு மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது அதே வகுப்பினைச் சேர்ந்த சக மாணவர்கள் அவ்விருவரையும் தாக்கியுள்ளனர்.

தங்கம் கடத்துவதற்காகவே.. சென்னை விமான நிலையத்தில் யூடியூபர் திறந்த கடை.. ஆடிப்போன சுங்கத்துறை

இச்சம்பவம் பள்ளி வளாகம் முழுக்க பரபரப்பினைக் கிளப்ப உடனே ஆசிரியர்கள் வந்து அவர்களை விலக்கினர். இருப்பினும் பொன்னாகுடியைச் சேர்ந்த இருமாணவர்கள் மீதும் முதுகிலும், முகம், தோள்பட்டை என சராமாரியாகத் தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து 7 மாணவர்களைக் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். சாதி ரீதியிலான மோதலே இச்சம்பவத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும் இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஆதரவாக நின்ற நெல்லை மார்க்சிஸ்ட் கட்சி அலுவலத்திற்குள் உறவினர்கள் சென்று சூறையாடியது பரபரப்பினை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து நெல்லைப் பகுதிகளில் சாதி மோதல் இளம் வயதினரிடையே ஏற்படுவதால் மாணவர்களின் கல்வியும், அவர்களின் எதிர்காலமும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டே ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு முதல்வர் ஸ்டாலினுக்கு, கல்வி நிறுவனங்களில் சாதிப் பெயர் கூடாது. மாணவர்களுக்கு கையில் சாதிக்கயிறு உள்ளிட்ட அடையாளங்கள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.