சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு போன நடிகர்களுள் ஒருவர் சேத்தன். இவர் தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். 2000களில் முற்பகுதியில் சின்னத்திரை தொடர்கள் மிகவும் பிரபலம் அடைந்த காலகட்டம் அது. சன் டிவியின் ‘மர்மதேசம்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார் சேத்தன்.
அந்த காலகட்டத்திலேயே மிக பிரபலம் அடைந்து பற்றி தொட்டி எங்கும் பரவிய 811 எபிசோடுகளை கொண்ட சன் டிவியின் ‘மெட்டி ஒலி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சேத்தன். அடுத்து 1272 எபிசோடு கொண்ட தொடரான ‘அத்தி பூக்கள்’ தொடரில் நடித்த பின்னர் ‘ஆனந்த பவன்’, ‘பஞ்சவர்ணக்கிளி’, ‘மலர்கள்’, ‘ருத்ரவீணை’, ‘உதிரி பூக்கள்’ போன்ற பல தொடர்களில் நடித்தவர் சேத்தன்.
சின்னத்திரையில் நடித்ததன் மூலம் சினிமா வாய்ப்பினை பெற்ற சேத்தன் 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘தாம் தூம்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘நிபுணன்’, ‘படிக்காதவன்’, ‘அனபெல் சேதுபதி’, ‘தேஜாவு’, ‘அயோத்தி’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் சூரி நடித்து ஹிட்டான ‘விடுதலை’ திரைப்படத்தில் கொடூரமான வில்லன் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டி இருப்பார் சேத்தன். இப்படத்தில் இரண்டாம் பாகம் வெளிவர இருக்கிறது. நடிப்பு மட்டுமல்லாமல் சேட்டன் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வருகிறார்.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சேத்தன் தனது திரையுலக வாழ்க்கையை பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், திரையுலகில் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் பல ஆண்டுகள் நடித்திருக்கிறேன். அதனால் நிறைய விஷயங்களை கற்று இருக்கிறேன். டப்பிங் கலைஞராகவும் தமிழ்,கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களுக்கு டப்பிங் செய்துள்ளேன். சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘மகாராஜா’ திரைப்படத்தில் வரும் அனுராக் காஷ்யப் கதாபாத்திரத்திற்கு நான் தான் டப்பிங் செய்தேன். வேறு எங்கும் கிடைக்காத அங்கீகாரம் இந்த படத்தில் டப்பிங் செய்த போது எனக்கு கிடைத்தது. அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று சேத்தன் பகிர்ந்துள்ளார்.