மெஹந்தி சர்க்கஸ் படத்தை அனைவரும் பார்த்திருப்போம். நம் பக்கத்து வீட்டுப் பையன் போல நடித்து கிராமத்து இளைஞர்களின் காதல் நாயகனாக ஒரே படத்தில் ஜொலித்தவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். கோடி அருவி கொட்டுதே என்ற பாடல் மூலம் கண்ணை மூடி கண்ட கனவாக இளைஞர்கள் மனதில் ரீங்காரமிட்டவர். நடிகராக மட்டுமே அறியப்பட்ட மாதம்பட்டி ரங்கராஜுக்குப் பின்னால் உள்ள இப்படி ஒரு வரலாறு உண்டு என்றால் பிரமித்துப் போய்விடுவீர்கள்.
இன்று இளைஞர்கள் நல்ல வேலை தேடி அலையும் சூழ்நிலையில் சமையல் கரண்டியை கையில் எடுத்து அதில் ஜாம்பவானாக மாறி இவர் சமைக்காத பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளே இல்லை என்னும் அளவிற்கு சமையல்கலை தொழிலில் கொடிகட்டிப் பறக்கிறார்.
பொறியியல் பட்டதாரியான மாதம்பட்டி ரங்கராஜுக்கு அனிமேஷன் மற்றும் சமையல் கலையில் ஈடுபாடு எழவே தனது குடும்பத் தொழிலுக்கு மூட்டைகட்டிவிட்டு பெங்களுரில் ஹோட்டல் ஒன்றை நடத்தினார். பின்னர் தனது சொந்த ஊரான மாதம்பட்டிக்குத் திரும்பி கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு உணவு ஆர்டர் எடுத்து செய்யத் தொடங்கினார்.
இவரின் விடா முயற்சியும், தரமும் சினிமா ஷுட்டிங்களுக்கு உணவு வழங்கும் வாய்ப்பைத் தர அவரது வாழ்வில் ஏறுமுகம் கண்டார். தொடர்ந்து பல்வேறு சினிமா ஷுட்டிங்களுக்கு உணவு வழங்க பிரபல திரையுலகினர் மற்றும் அரசியல் புள்ளிகளின் கவனம் ஈர்த்தார்.
கைதி படத்தின் பிரியாணி சீன் இப்படித்தான் யோசிச்சாங்களா? Secret சொன்ன லோகேஷ்
குறிப்பாக பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கும், இயக்குநர் ராஜமௌலி வீட்டு திருமணம், விக்ரம் வெற்றி விழா விருந்து போன்றவற்றிற்கும் அறுசுவை உணவு படைத்து உலக சமையல் கலை வல்லுநர்களின் கவனம் ஈர்த்தார். மாதம்பட்டி குரூப்ஸ் என்ற கேட்டரிங் சர்வீஸ் நிறுவனத்தை நடத்திவரும் மாதம்பட்டி ரங்கராஜ் வெளிநாடுகளிலும் உணவு வழங்கும் சேவையை செய்து வருகிறார்.
சமையல்கலை தொழிலை கார்ப்பரேட் தொழிலாக மாற்றி இன்று உலகின் முன்னணி தொழில் முனைவோராக செயல்பட்டு வருகிறார். தமிழக அரசு இவருக்கு சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கி கௌரவித்தது.
எந்த ஒரு துறையிலும் நுழைந்து தோல்வி அடைந்து விரக்தியானவர்கள் அதையே திரும்பி செய்யமால் மாற்றி யோசித்தால் வெற்றி என்பதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் அவர்கள் சிறந்த உதாரணம். கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படத்திலும் நடித்த இவர் தற்போது கேசினோ என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.