களத்தூர் கண்ணம்மா படத்தில் 4 வயது பாலகனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன். திரையில் இவர் தொடாத துறையே இல்லை என்னும் அளவிற்கு ஒரு தனி மனித சினிமா பல்கலைக்கழகமாகவே திகழ்கிறார். சினிமாவில் எந்த சந்தேகம் வந்தாலும், எந்த தொழில்நுட்பங்கள் வந்தாலும் இயக்குநர்களும், டெக்னீசியன்களும் இவரைக் கலந்தாலோசிக்கத் தவறுவதில்லை.
சினிமாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார் என்பதை இவரின் படங்களைப் பார்த்தாலே புரியும். சிறுவயதில் திரைப்படங்களில் நடித்தவர் பின்னர் தங்கப்பன் என்ற நடன இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார் கமல்ஹாசன். ஆனால் இவர் எவ்வாறு நடனம் கற்றுக் கொண்டார் என்பதை அவர் கூறுகையில், “கிளாசிகல் நடனம் கற்றுத்தரும் ஆசிரியர் ஒருவர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்கு வாடகைக்கு வந்தார். ‘வீட்டிலேயே டான்ஸ் வகுப்புகளை நடத்திக்கொள்கிறேன்’ என்றார். ‘வீட்டிலேயே நடன வகுப்பு. நீயும் சும்மாதான் இருக்கிறாய்’ என்று அம்மா என்னையும் அதில் சேர்த்து விட்டார். அப்படித்தான் எனக்கு பரதம் அறிமுகம் ஆனது.
ஒரே ஒரு பாட்டுக்காக வாலியை அழைத்து எழுதிய கண்ணதாசன்.. இதுதான் காரணமா?
அந்த நடன ஆசிரியர் ஒருநாளைக்கு நான்கு பேட்ச் என்று பிரித்து வகுப்பெடுப்பார். நான் அந்த நான்கு பேட்சுகளிலும் ஆடுவேன். இந்தத் தொடர் பயிற்சியால் எனக்கு பரதம் எளிதாக வந்தது. ‘எனக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுத்துவிட்டேன். நீயும் நன்றாக ஆடுகிறாய். அரங்கேற்றம் பண்ணலாம். ஆனால், நான் கற்றுத்தந்தது என்னளவில்தானே தவிர, கற்றுக்கொள்ள எல்லையில்லை. அடுத்து வேறொரு நல்ல ஆசிரியரை நானே பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவரே வேறொரு மாஸ்டரை அழைத்து வந்தார்.
ஒரு வாத்தியார் இப்படிச் சொல்லவே மாட்டார். ஆனால், அவர் சொன்னார், செய்தார். அடுத்து குல்கர்ணி என்ற ஒருவர் கதக் கற்றுத்தர வந்தார். பிறகு கொஞ்ச நாள் குச்சுப்புடி கற்றுக் கொண்டேன். பிறகு வடநாட்டு நடன வகைகள். இப்படி வீட்டில் இசையொலி கேட்டுக் கொண்டே இருக்க என்னைத் தேடி வந்த ஆசிரியர்களும் முக்கியமான காரணம்.
அதன் வழிவந்த இதர மொழிப் பாடல்களால் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையும் ஒற்றுமையும் தமிழின் தனித்தன்மையும் புரிந்தது. பாரதியின் `யாமறிந்த மொழிகளிலே’ என்னும் வரியின் அர்த்தம் அனுபவத்தால் உணர்ந்தேன்.” என்று நூல் ஒன்றில் கமல்ஹாசன் எழுதியுள்ளார்.
சினிமாவின் அனைத்து நுட்பங்களையும் தன்னுடைய படங்களில் சுய பரிசோதனை செய்து அதில் வெற்றியும், தோல்வியும் கண்டு இன்னமும் சினிமாவிற்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறார் இந்த உலக நாயகன்.