இயக்குநர் மகேந்திரனை தவிர்த்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது என்று சொல்வது மிகவும் கடினம். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், காலத்திற்கு அழிக்க முடியாத கோலங்களாய் ஒரு கவிதை வாசிப்பாக நெஞ்சில் நிழல் ஆடும். அழுத்தம் நிறைந்த கதையம்சத்தை மிக நேர்த்தியாக எளிமையாக புரிய வைக்கும் பக்குவம் கொண்ட இயக்குநர் மகேந்திரேன்.
ரஜினி – மகேந்திரன் கூட்டணியில் உருவான முள்ளும் மலரும் படத்தை எடுத்துக்கொண்டால் கதாபாத்திரங்களின் ஆழமான உணர்ச்சிகளை கண்ணை விட்டு அழகாத அழகியலோடு காட்சிப்படுத்தியிருப்பார். பார்க்க கெட்டவன் மாதிரி தெரிந்தாலும் மனதில் பட்டதை பட்டென பேசும் காளியோட சுபாவம் தான் முள்ளும் மலரும் படத்தின் வெற்றியை உறுதி செய்தது. இன்றைக்கும் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் ‘கெட்ட பய சார் இந்த காளி’ மாஸ் ஆடியன்ஸை கவர்ந்து இழுக்கிறது.
தான் செய்யாத தவறுக்காக வேலையை இழக்கும் ரஜினி, உயர் அதிகாரி சரத்பாபுவிடம் ‘ரெண்டு கையும் காலும் இல்லைன்னா கூட இந்த காளின்றவன் பொழச்சுக்குவான் சார்’ என்ற வசனங்கள் உணர்ச்சி ததும்ப வெகுசன சினிமா பார்வையோடு ரஜினியை கோலோச்ச வைத்தன. மகேந்திரன் எனும் சாதுர்யமானவருக்கு தமிழ் சினிமாவில் ஏன் இப்படி பக்கம் பக்கமாக வசனம் பேசுகிறார்கள் நமது வீட்டில் இருப்பது போன்று பேசலாமே.
நாம் சாப்பிடுவது பழைய கஞ்சி தான் அதை அப்படியே காட்டுவதில் என்ன சிக்கல் என பல கேள்விகளை தனக்குள்ளே கேட்டுக்கொண்டவர். 80களில் இருந்த சினிமாவின் ரசனையின் போக்கை மாற்றியமைத்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு. ஆனால், உதிரிப்பூக்களை வெகுசன சினிமாவோடு ஒப்பிட முடியாது. சிறிதளவும் சமரசம் இல்லாமல் மக்களை கவரக்கூடிய அனைத்து காட்சிகளும் இருந்தன.
சினிமாவில் நடிகர், நடிகைகள் தேர்வு என்பது ஒரு விபத்து போலதான் தேர்வாகும். அப்படியொன்று நிகழவே கூடாது என்று நினைத்த ஒருவர் அன்பின் கட்டளையால் நடிக்க வந்தவர் தான் சுஹாசினி. மகேந்திரன் ஜானி படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் உதவியாளராக பணியாற்றியவர் சுஹாசினி. அவர் படப்பிடிப்பு தளத்தில் சுட்டி குழந்தை போலை துறுதுறுவென்று அங்கும் இங்கும் சுத்தி கொண்டிருந்தார்.
அவரது ஒவ்வொரு அசைவுகளையும் பார்த்த மகேந்திரன் வியந்து போனார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு எப்படி ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்திற்கு விளக்கில்லா வெளிச்சத்தில் ஒளியாய் தெரிந்த தேவதையாக ராதா தெரிந்தாரோ அதே போன்று தான் மகேந்திரன் மூளைக்கும் டார்ச் அடித்தது. தான் இயக்க வேண்டிய புதிய படத்தை விடுத்து ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்திற்காக புதுமுகங்களோடு களமிறங்கினார் மகேந்திரன்.
இப்படம் பெரும் வெற்றியை பெற்றது. மகேந்திரனின் வற்புறுத்தலால் நடிக்க ஒப்புக்கொண்ட சுஹாசினி, பிற்காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
‘நெஞ்சத்தை கிள்ளாதே’ திரைப்படம் வெற்றி பெற்றதை விட அப்படத்தின் கதை எங்கிருந்து உருவானது என்பதே மிகவும் சுவாரஸ்யமானது. மீண்டும் ஒரு எபிசோடில் காணலாம்.