ஒரு திரைப்படத்தின் வசூல் தகவல்கள் குறித்து தயாரிப்பாளர்களே பொய் சொல்கிறார்கள் என ‘துணிவு’ இயக்குனர் எச் வினோத் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் வெளியான அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களின் வசூல் விபரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் டிராக்கர்கள் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படம் 210 கோடி ரிலீஸ் வசூல் செய்துள்ளதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த கணக்கை திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு கொடுப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் எந்த அடிப்படையில் ரூபாய் 210 கோடி வசூல் செய்தது என்று அறிவிக்கப்பட்டது என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி பணம் வாங்கிக்கொண்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் ட்ராக்கர்கள் தங்கள் இஷ்டத்திற்கு வசூல் எண்ணிக்கைகளை பதிவு செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டுள்ளது. துணிவு படத்தின் வசூல் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியே வராத நிலையில், வாரிசு படத்தின் வசூல் விவரங்கள் மட்டும் வெளியாகி வருவது துணிவு பட குழுவினர்களை அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த எச் வினோத், வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் விளையாட்டுக்காக தயாரிப்பாளர்களே பொய் சொல்ல தொடங்கிவிட்டனர் என்று கூறியுள்ளார். தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் கடந்த சில வருடங்களாக பொய்யான தகவல்களை வசூல் விவரங்களாக தெரிவிக்கின்றனர் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது.
ஒரு நடிகரின் அடுத்த படத்தின் கால்ஷீட் வாங்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே தோல்வி அடைந்த படத்திற்கு கூட வெற்றி விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் பல மடங்கு வசூல் தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இவ்வாறான பொய்யான தகவல்களால் சினிமா உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு முடிவு கட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பின் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.