கவுண்டமணி முதல் இளையாராஜா வரை.. விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

By Sarath

Published:

நடிகர் விஜயகாந்த் இன்று காலை 6:10 மணிக்கு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். முன்னதாக அவருக்கு கொரோனா சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாக தேமுதிக தரப்பு ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு இல்லை என மருத்துவமனை சார்பாக அறிக்கை வெளியானது.

மறைந்தார் கேப்டன் விஜயகாந்த்:

கேப்டன் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் மக்கள் வெள்ளம் அவரைக் காண அலைமோதி வரும் நிலையில் அங்கிருந்து கட்சி அலுவலகமான தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு ஸ்தம்பிக்கும் அளவுக்கு கூட்ட நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக அலுவலகத்தில் இருந்து நாளை காலை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

பல மாவட்டங்களில் இருந்தும் விஜயகாந்த் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றுள்ளனர். நாளையும் அதிக அளவிலான பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள் என்றே தெரிகிறது. அதற்கு ஏற்ற வகையில் அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் நாளை ரத்து செய்யப்படுகிறது.

பிரபலங்கள் நேரில் அஞ்சலி:

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், டி. ராஜேந்தர், இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர். முருகதாஸ், உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின் , எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், தமிழிசை சௌந்தர்ராஜன் என சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையின் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு காலையிலேயே சென்னைக்கு புறப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இன்று இரவு அல்லது நாளை காலை விஜயகாந்த் உடலுக்கு அவர் அஞ்சலி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடி வரும் எஸ்.ஏ. சந்திரசேகர், விஷால், சிம்பு உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்கள் மூலமாக அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் இரங்கல்:

மேலும் நடிகர் சூர்யா, திரிஷா, ராகவா லாரன்ஸ், சித்தார்த், சாந்தனு, பிரசன்னா, சிம்ரன், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி மற்றும் ஏ ஆர் ரகுமான் என பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை பதிவிட்டுள்ளனர். நடிகர்கள் விஜய், வடிவேலு மற்றும் அஜித் தரப்பிலிருந்து எந்தவொரு இரங்கல் அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.