சினிமா என எடுத்துக் கொண்டால் அதில் வரும் நடிகர்கள் அல்லது நடிகைகள் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப திரையில் மட்டும் தான் தோன்றுவார்கள். இன்னும் புரியும்படி சொல்ல போனால் படத்தில் நாயகர்களாக வருபவர்கள் நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக கூட இருக்கலாம். இதே போல, வில்லன்களாக படத்தில் வரும் பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் சிறந்த குணம் கொண்டவர்களாகவும் விளங்குவார்கள்.
அதையும் தாண்டி திரையில் காமெடி செய்பவர்கள் நிஜ வாழ்க்கையில் சீரியஸான நபராக கூட இருக்கலாம். ஆனால் இதை எல்லாம் தாண்டி திரையிலும், நிஜத்திலும் ஒரே போன்று குணத்துடனும் இருப்பவர் தான் கவுண்டமணி. வடிவேலுவுக்கு முன்பான காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி பக்கங்களை நிச்சயம் கவுண்டமணி இல்லாமல் எழுதவே முடியாது.
கவுண்டமணி – செந்தில்
கவுண்டமணி தனியாகவோ அல்லது செந்திலுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாத வகையில் உருவாக்கப்பட்டவை. அதிலும் மக்கள் மத்தியில் இன்றும் நிலவி வரும் சாதிய பாகுபாடு பற்றியும், மூட நம்பிக்கைகள் பற்றியும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பாக சீரியஸான தொனியில் சொல்லாமல் மிகவும் வேடிக்கையாக எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சொல்வதில் கவுண்டமணிக்கு நிகர் கவுண்டமணி தான்.
அதன் கவுண்டமணி ஸ்டைலு..
திரையில் வசனம் பேசுவதுடன் தனது காமெடி பேச்சை நிறுத்திக் கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் கூட அனைவரையும் கவுண்டர்கள் மூலம் கிறங்கடிக்க வைப்பவர் தான் கவுண்டமணி. சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள் என்பதும், நடிகனை தெய்வம் போல பார்க்க வேண்டாம் என்பதும் தான் கவுண்டமணியின் கருத்து. இதன் காரணமாகவே தன்னை பெரிய பிரபலம் போல கருதி பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க நெருங்கினால் தனது ஸ்டைலிலேயே கலாய்த்து அனுப்பி விடுவார் கவுண்டமணி.
இப்படி கவுண்டமணி செய்த சம்பவங்கள் தொடர்பாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், அவரது மிக நெருங்கிய நண்பரும், நடிகருமான சத்யராஜூம் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்திருந்தார்.
கிளம்புங்க முதல்ல..
இது பற்றி சத்யராஜ் தெரிவித்த கருத்தின் படி, ஒரு பத்திரிகையாளர் கவுண்டமணியை பேட்டி எடுத்துள்ளார். அப்போது கவுண்டமணியிடம் கேள்வி கேட்ட அந்த நபர், “உங்க வாழ்க்கையில மறக்க முடியாத நிகழ்ச்சி என்ன” என கேட்டுள்ளார். இதற்கு திரும்ப கேள்வி கேட்ட கவுண்டமணி, “நீங்கள் இன்று காலையில் என்ன சாப்பிட்டீர்கள்?” என கேட்க, அதற்கு அந்த பத்திரிக்கையாளரோ, “என்ன சாப்பிட்டேன் என்பதை மறந்து விட்டேன்” என பதில் கூறியுள்ளார்.
இதன் பின்னர் பேசிய கவுண்டமணி, “அதுவே உங்களுக்கு மறந்து போய் விட்டது. அதே போல எனக்கும் என் வாழ்க்கையில் நடந்ததெல்லாமே மறந்து போய் விட்டது. கிளம்புங்கள்” என வேடிக்கையாக பதில் கூறியுள்ளார். திரைப்படத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பிரபலம் போல இல்லாமல் இயல்பாக கவுண்டமணி இருந்தது தான் பலரையும் வெகுவாக ஈர்க்க உதவியிருந்தது.
நான் கடந்த 7 ஆண்டுகளாக பல வலைத்தளங்களில் கிரிக்கெட், சினிமா தொடர்பான செய்திகளை சுவாரஸ்யம் குறையாமல் வாசகர்கள் விரும்பும் வகையில் எழுதி வருகிறேன். இணையத்தில் இன்று ஏராளமான செய்திகள் சரியான விவரங்கள் இல்லாமல் வெளியாகி வரும் சூழலில் முடிந்த அளவுக்கு சிறந்த செய்திகளை கொடுப்பதற்கு நான் முன்னுரிமை கொடுத்து எழுதி வருகிறேன்.

