சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் பேசிய நடிகை தமன்னா பாட்டியா, முகப்பரு மற்றும் சரும பிரச்சனைகளை கையாள தான் பயன்படுத்தும் ரகசிய முறையைப் பகிர்ந்து கொண்டார். காலையில் எழுந்தவுடன் வரும் எச்சிலை முகப்பரு மீது தடவி வந்தால், அது சீக்கிரம் காய்ந்துவிடும் என்றும், இந்த முறை தனக்கு பல ஆண்டுகளாக பலனளிப்பதாகவும் அவர் கூறினார்.
பழங்கால நம்பிக்கைகளின்படி, காலையில் வரும் எச்சிலில் உள்ள நொதிகள் மற்றும் ஆன்டிபாடிகள் காரணமாக, அது முகப்பருவை குணப்படுத்தும் ஒரு தீர்வாக கருதப்பட்டது. ஆனால், இந்த கூற்றுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா அல்லது இது வெறும் கட்டுக்கதையா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
எச்சில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்குமா?
தோல் சிகிச்சை நிபுணர் ஒருவர் இதுகுறித்து கூறியபோது, ‘எச்சிலில் பல வகையான பாக்டீரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் உள்ளன. இவற்றில் சில உங்கள் சருமத்திற்கு பயனற்றவையாக அல்லது தீங்கு விளைவிப்பவையாக இருக்கலாம். முகப்பரு உள்ள பகுதியில் எச்சிலை தடவுவது, அந்த கிருமிகளை உள்ளே அனுப்பி, தொற்றுக்கு வழிவகுக்கும்.
எச்சிலில் உள்ள நொதிகள் மற்றும் அதன் அமிலத்தன்மை காரணமாக, அது எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக, மென்மையான சருமம் கொண்டவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.
காலையில் வரும் எச்சில், முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளை திறம்பட குணப்படுத்தும் அல்லது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. பொதுவாக, எச்சிலுக்கு சில அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும், வாய்வழி செயல்பாடுகளுக்கு மட்டுமே அவை போதுமானவை. சருமத்தில் ஏற்படும் அழற்சியை குறைக்கவோ, குணப்படுத்தவோ அவை போதுமான அளவில் இல்லை.
எனவே, இதுபோன்ற சரும பிரச்சனைகளுக்கு சுய சிகிச்சை எடுப்பதற்கு பதிலாக, அங்கீகரிக்கப்பட்ட தோல் மருத்துவரை அணுகி, முறையான மருந்துகள் அல்லது கிரீம்களை பயன்படுத்துவதே சிறந்த தீர்வு என்று கூறினார்.
எனவே தமன்னா தனது எச்சிலை பயன்படுத்தினார் என்பதற்காக அனைவரும் இதுபோன்ற ரிஸ்க்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
