தீபாவளிக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் மட்டும் வருவது ஆரோக்கியமான போக்கா

By Staff

Published:

1992ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன திரைப்படங்களின் லெவலே வேறு கமலஹாசனின் தேவர் மகன், ரஜினிகாந்தின் பாண்டியன் இது மட்டுமல்லாது பாக்யராஜின் ராசுக்குட்டி, சத்யராஜின் திருமதி பழனிச்சாமி, பிரபுவின் செந்தமிழ்ப்பாட்டு, விஜயகாந்தின் காவியத்தலைவன் என பல படங்கள் ரிலீஸ் ஆனது இது மட்டுமல்லாது இன்னும் பல சின்ன சின்ன படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இது தமிழ் சினிமா கண்ட மிகப்பெரிய அப்போதைய சாதனை. இந்த படங்களின் வசூல் அந்த நேர பொருளாதாரத்தின்படி 76 கோடியை தொட்டிருக்கிறது.

efc2a450fd5f1a5bc3ce0072298803ea

இதில் ரஜினியின் பாண்டியன் , கமலின் தேவர் மகனுக்கு சரிசமமாக பாக்யராஜின் ராசுக்குட்டி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுதான் விசயம் நல்ல திரைப்படம் என்றால் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் அல்லாது அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்களையும் முன் பின் பெயர் தெரியாத நடிகர்களாக இருந்தாலும் படமும் கதையும் நன்றாக இருந்தால் அந்த படங்களை ரசித்து ஓட வைப்பவர்கள்தான் ரசிகர்கள். அவர்களுக்கு நடிகர்கள் முக்கியமில்லை.

அதே நேரத்தில் அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி , கமல், தற்போது அஜீத், விஜய் என இருபெரும் சூப்பர் ஸ்டார்கள் அந்த காலத்தில் இருந்தே வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.இவர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

அந்தக்காலங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி படம் வந்தாலும் சரி, ரஜினி, கமல் படம் வந்தாலும் சரி தீபாவளியின்போது அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நடிகர்களின் படங்களோ அல்லது புதுமுக நடிகர்கள் நடிக்கும் கதையம்சமுள்ள படங்களோ தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் வராமல் இருந்ததில்லை. ஆரவாரமாக வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் சத்தமில்லாமல் பெட்டிக்குள் போய் சத்தமில்லாமல் வந்த பல படங்கள் ஆரவாரமாக வந்த வரலாறு உண்டு.

சமீப வருடங்களாக தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு ஏழெட்டு படங்கள் ரிலீஸ் ஆன காலம் போய் 5, 4 என சுருங்கி கொண்டு வந்தது பின்பு அதுவும் சுருங்கி 2, 3 என சுருங்கி விட்டது. அதுவும் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே முக்கிய பண்டிகைக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என நினைத்து முடிவெடுத்து படம் வெளியிடுவது தமிழ் சினிமாவின் சாபக்கேடுதான்.

அஜீத் விஜய் படங்களே ரிலீஸ் ஆகாவிட்டாலும் அதற்கு அடுத்த நிலை நடிகர்கள்விஷால், விஜய் சேதுபதி படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகின்றன. கதையம்சமுள்ள படங்கள் வெளியாவதில் தயக்கம் உள்ளது ஏன் என தெரியவில்லை. அதிகபட்சம் 2 படங்களே தற்போது பண்டிகைக்கு ரிலீஸ் ஆகின்றன ஒரு ஊரில் 3 தியேட்டர் இருந்தால் தீபாவளிக்கு இரண்டு தியேட்டரில் ஒரே நடிகரின் படங்களும் ஒரு தியேட்டரில் இன்னொரு நடிகரின் படமும் ரிலீஸ் ஆகிறது.

முன்னணி நடிகர்களின் படங்களை மட்டும் ரிலீஸ் செய்தால் வசூல் மழை கொட்டோ கொட்டும் என நினைக்கிறார்கள் போலும்.

தங்கர்பச்சான் இயக்கிய அழகி படம் 2002 பொங்கலுக்கு வந்தது. அப்போ அவர் பெரிய இயக்குனர் இல்லை. படத்தில் நடித்த நந்திதா தாஸை வடமாநிலத்தை தவிர யாருக்கும் தெரியாது. பார்த்திபன் மட்டுமே நடித்திருந்தார்.

அந்த படங்களோடு வந்திருந்த உச்ச நடிகரான அஜீத் நடித்த ரெட் திரைப்படமும், கமல் நடித்த பம்மல் கே சம்பந்தம் போன்றவை ஆரவாரமாக வெளியானலும் இறுதியில் சைலண்ட்டாக முரட்டு வெற்றியை பெற்றது அழகி திரைப்படம்தான்.

இது போல நிலை தற்போது இல்லை என்பதே குறிப்பிடத்தக்கது. வெற்றியோ தோல்வியோ முன்னணி நடிகர்களின் படங்கள், கதையம்சமுள்ள படங்கள் என எல்லாவற்றையும் களமிறக்குங்கள். இதைத்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என முன்னணி நடிகர்களின் படங்கள் , முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்பதே நம் நிலைப்பாடு.

கலர்ஃபுல்லாக அனைத்து படங்களையும் பார்த்து கொண்டாடினால்தான் தீபாவளி. இரண்டு நடிகர்கள் படம் மட்டும்தான் ரிலீஸ் அதை தியேட்டரில் ஏழு ஸ்க்ரீன் இருந்தால் ஏழிலும் அதையே திரையிட்டு இந்த படங்களே பிடிக்கலேன்னாலும் இதையேதான் பார்த்தாக வேண்டும் என சினிமா ஆர்வலனுக்கு நெருக்கடி கொடுப்பதெல்லாம் வேற லெவல் சிந்தனை என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

அதே நேரத்தில் தயாரிப்பு கவுன்சில் அனுமதி கொடுத்தாலும் கூட தீபாவளி ரேஸில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவதால் நம்ம படம் தோற்று விடுமோ என பயப்படும் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள் இந்த நிலை மாற வேண்டும். நல்ல கதையம்சத்துடன் இருந்தால் எந்த படமும் எந்த நிலையிலும் ஓடும் என்பதே உண்மை.

Leave a Comment