நடிகராக முதல் மூன்று படம் பிளாப்.. இயக்குநராக ஹாட்ரிக் வெற்றி.. வெங்கட் பிரபு சாதித்தது இப்படித்தான்..

By John A

Published:

இன்று தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மூலமாக இந்திய சினிமா ரசிகர்களையும், திரைப் பிரபலங்களையும் வாயடைக்க வைத்திருக்கிறார் வெங்கட்பிரபு. தி கோட் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் சூழலில் வெங்கட் பிரபு இந்த இடத்தினை அடைவதற்கு கிட்டத்தட்ட 20 ஆண்டு போராட்டம் இருந்திருக்கிறது.

என்னதான் இளையராஜா, கங்கை அமரன் என பாரம்பரிய சினிமாக் குடும்பத்தில் இருந்து வெங்கட்பிரபு வந்தாலும் அவரின் திறமையை நிரூபிக்க நடிப்பு அவருக்குக் கைகொடுக்கவில்லை. வெங்கட்பிரபு நடிகராக ஆசைப்பட்டு முதன் முதலாக அவர் நடித்த படமான பூஞ்சோலை படம் வெளியாகவே இல்லை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ‘பிதாமகன்’ சங்கீதா.

இதனையடுத்து வெங்கட்பிரபு நடித்த அடுத்தபடம் தான் காதல் சாம்ராஜ்யம் இந்தப்படமும் வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கியது. சரி இரண்டு படங்கள் போனால் போகட்டும். அடுத்த படமான வான்டட் படமாவது நல்ல எதிர்காலத்தினைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் நடித்தார் வெங்கட்பிரபு. ஆனால் காலம் அவரைச் சோதித்து இந்தப் படமும் வெளியாகமால் போக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

நண்பர்களும், சினிமாத் துறையினரும் ராசியில்லாதவன் என்று கூற எஸ்.பி.பி.சரண் தன் நண்பனைக் கை விடவில்லை. 2002-ல் ஸ்ரீ காந்த் நடிப்பில் வெளியான ஏப்ரல் மாதத்தில் திரைப்படம் இவருக்குக் கைகொடுத்தது. ஆனால் ஹீரோவாக அல்ல.. ஹீரோவின் நண்பனாக. தொடர்ந்து உன்னைச் சரணடைந்தேன், அஜீத்துடன் ஜீ, விஜய்யுடன் சிவகாசி போன்ற படங்களில் நண்பனாக நடித்தார்.

நினைவுக்கு வந்த அப்பா.. மளமளவென எழுதித் கௌதம் வாசுதேவ் மேனன்.. உருவான வாரணம் ஆயிரம்..

இப்படி இரண்டாம் கட்ட நடிகராக சில படங்களில் நடித்த வெங்கட் பிரபுவுக்கு அதுவும் கைகூடாமல் போக மனம் சோர்ந்தார். அதன்பின் அவரை எஸ்.பி.பி சரண் நீ படங்கள் இயக்கலாமே என ஐடியா கொடுக்க, எனக்கு டைரக்ஷன் தெரியாது என்று கூற இயக்குநர் சமுத்திரக் கனியும், எஸ்.பி.பி. சரணும் நாங்கள் இருக்கிறோம் என தோள் கொடுத்திருக்கின்றனர்.

இப்படித்தான் சென்னை 600028 கதை உருவானது. எஸ்.பி.பி.சரணே படத்தினைத் தயாரித்தார். வெங்கட் பிரபு தாங்கள் சிறுவயதில் நண்பர்களுடன் விளையாடிய நினைவுகளை அப்படியே ஜாலியாக படமாக எடுக்கலாம் என எண்ணினார். படமும் உருவானது. யுவனின் இசை படத்திற்குப் பக்கபலமாக அமைந்தது. சென்னை 600028 படம் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. இப்படத்தின் வெற்றி வெங்கட் பிரவுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

தொடர்ந்து அடுத்த படத்திற்குத் தயாரானார். சரோஜா என்ற நகைச்சுவை திரில்லர் படத்தினை இயக்கினார். இப்படமும் வெற்றிபெற, மூன்றாவது இயக்கிய கோவா திரைப்படம் அவரை இந்திய அளவில் கவனிக்க வைத்தது. இப்படி காமெடி ஒன்றை மட்டும் தனியே எடுத்து அதை கமர்ஷியலாகக் கலந்து கொடுப்பதில் சூப்பர் ஹிட் இயக்குநராக வலம் வரத் தொடங்கினார்.

அடுத்து வெங்கட்பிரபு யாரை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழ அடித்தது லக். அஜீத் நடிப்பில் மங்காத்தா உருவானது. அஜீத்துக்கு 50-வது படமாக உருவான மங்காத்தா வரலாற்று வெற்றியைப் பெற்றது. வெங்கட்பிரபு முன்னனி இயக்குநர்களில் ஒருவராக மாறினார்.

தொடர்ந்து கார்த்தி நடித்த பிரியாணி, சூர்யா நடித்த மாசி, சென்னை 600028 பார்ட் 2 போன்ற படங்கள் சற்று சோடை போக அடுத்த படமான மாநாடு மீண்டும் வெங்கட்பிரபுவுக்கு ஹிட் கொடுத்தது. இப்படி தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மக்களின் ரசனையைக் கண்டறிந்து சினிமாவில் சிறந்த பொழுது போக்குப் படங்களைக் கொடுத்து வருகிறார் வெங்கட்பிரபு.