சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரையும் திருப்தி படுத்துவது என்பது இயலாத காரியம். எந்தப் படம் பார்த்தாலும் அதில் ஏதாவது ஒரு குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருபடம் எந்தக் குறையும் இல்லாமல் காதல், காமெடி, பாடல்கள் என அனைத்துமே பர்ஸ்ட் கிளாஸாக அமைந்து காஷ்மீரின் குளுமையை கண்முன் கொண்டு வந்தது என்றால் அது தேன்நிலவு படமாகத் தான் இருக்க முடியும்.
1961-ல் புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் ஜெமினிகணேசன், வைஜெயந்தி மாலா, நம்பியார் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் காஷ்மீர் பனிமலையில் எடுக்கப்பட்டது. ஏ.எம்.ராஜாவின் இசையில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில் உருவான பாட்டுப்பாடவா, காலையும் நீயே, ஓஹோ எந்தன் பேபி போன்ற பல காலத்தால் அழியாத பல பாடல்கள் இடம்பெற்ற காவியம் இது.
அன்றைக்கு டெக்னிக்கல் வசதிகள் இல்லாத காலத்தில் ‘தேன் நிலவு’ படத்தை எடுக்க புதுமை இயக்குனர் ஸ்ரீதரும் அவரது சித்ராலயா யூனிட்டாரும் எவ்வளவு சிரமங்களை மேற்கொண்டனர் என்பதை முன்னொருமுறை ‘பொம்மை’ சினிமா மாத இதழில் தெரிவித்திருந்தார். அந்தப்பகுதி இங்கே…
காஷ்மீரில் படம் எடுத்த அனுபவத்தை இயக்குநர் ஸ்ரீதர் பொம்மை இதழில் கூறும் போது, “ “தேன் நிலவு படத்தை காஷ்மீரில் 52 நாட்கள் ஷூட் பண்ணினோம். எடுத்த காட்சிகளை உடனே போட்டுப் பார்க்கும் வசதி அப்போது கிடையாது. அதனால் நாங்கள் காஷ்மீரில் இருக்கும்போதே, எடுத்தவற்றையெல்லாம் அவ்வப்போது போட்டுப் பார்க்க விருமிபினோம்.சரியாக வரவில்லையென்றால் மீண்டும் எடுத்துக்கொள்ளலாமே என்பதனால்.
கமலுக்கு காதல் இளவரசன் பட்டம் கொடுத்த ‘பட்டாம் பூச்சி‘.. காதல் இளவரசி யாருன்னு தெரியுமா?
காஷ்மீரில் அதற்கான வசதிகள் அப்போது இல்லாததால், ஷூட்டிங் எடுத்தவற்றை போட்டுப்பார்க்க ஃபிலிம் ரோலகளை சென்னை அனுப்பித்தான் கழுவி பிரிண்ட் போட்டு வரவேண்டும்.
அப்போதெல்லாம் ஸ்ரீநகரில் இருந்து வாரம் இருமுறை மட்டும் ‘டக்கோட்டா’ விமானம் டெல்லிக்குப் போகும். அதில் எங்கள் சித்ராலயா நிர்வாகி ராமகிருஷ்ணன் மற்றும் ஒருவரை, நாங்கள் எடுத்த நெகட்டிவ் படச்சுருள்களோடு அனுப்பி வைப்போம். அவர்கள் டெல்லி சென்று, அங்கிருந்து சென்னை செல்லும் விமானத்தை பிடித்து சென்னைசென்று, அங்கு விஜயா லேபட்டரியில் அவற்றை பிரிண்ட் போட்டு மீண்டும் டெல்லி வழியாக ஸ்ரீநகர் வருவார்கள்.
அவ்வாறு சென்னையிலிருந்து பிரிண்ட் போட்டு, கொண்டுவரப்பட்ட அந்த படப்பிரதிகளை எடுத்துக்கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருந்த இடத்துக்கு அருகிலுள்ள கிராமத்தின் தியேட்டருக்குப்போய் அவர்களிடம் அனுமதி பெற்று, படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பார்ப்போம். திருப்தியில்லாத சில காட்சிகளை மீண்டும் எடுத்திருக்கிறோம். இரவு சுமார் மூன்று மணிக்கு மேல் அங்கிருந்து திரும்பி வந்து, படுத்து விட்டு காலை ஆறு மணிக்கெல்லாம் மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.
உண்மையில் ‘தேன் நிலவு’ படம் முதலில் ரிலீஸான தியேட்டர், காஷ்மீர் கிராமத்திலுள்ள அந்த தியேட்டர் என்றுதான் சொல்ல வேண்டும். படப்பிடிப்புக்காக நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, அந்த தியேட்டர் இருக்கும் கிராமம் வரையில் காரிலேயே செல்லும் அளவுக்கு ஒழுங்கான பாதை கிடையாது. சிறிது தூரம் நடந்தும் போக வேண்டும்.
அப்படிப்போகும்போது, நம்பியார், தான் ஒரு பெரிய வில்லன் என்ற பந்தா கொஞ்சமும் இல்லாமல் படச்சுருள் பெட்டிகளை தன்னுடைய தலையிலும், தோளிலும் சுமந்து வந்ததை நான் இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். நாங்கள் பட்ட கஷ்ட்டத்துக்கு பலன் கிடைத்தது. படம் வெற்றிகரமாக ஓடியது”.இவ்வாறு தேன்நிலவு உருவான கதையை இயக்குநர் ஸ்ரீதர் அதில் கூறியிருந்தார்.
.