தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் அவர்கள் தான். இயக்குனர் மட்டுமல்லாது ஷங்கர் அவர்கள் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவரது படங்களின் கதை, திரைக்கதை, தொழில்நுட்பம் என அனைத்தும் பிரம்மாண்டமாக இருக்கும்.
ஆரம்பத்தில் நடிகர் விஜயின் தந்தையான எஸ். ஏ. சந்திரசேகரன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்தின் வாயிலாகவே தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார்.
இவரது படங்கள் சமூக பிரச்சனைகளை எடுத்துக் கூறுவதாக இருக்கும். 1996 அம ஆண்டு ‘இந்தியன்’, 1999 ஆம் ஆண்டு ‘முதல்வன்’ ஆகிய படங்களை சமூகம் சார்ந்த பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்கினார். இவ்விரு படங்களும் ஹிட்டாகி வணீக ரீதியாகவும் வசூல் சாதனை படைத்தது. ஏ. ஆர். ரஹ்மான் இவ்விரு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். ஏ. ஆர். ரஹ்மானும், ஷங்கரும் இணைந்து 11 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளனர்.
அடுத்ததாக ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவை உலகறிய செய்தவர் ஷங்கர். இயக்கம் மட்டுமல்லாது, ‘காதல்’, ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’, ‘வெயில்’, ‘கல்லூரி’, ‘ஈரம்’ போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார் ஷங்கர்.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, ‘இந்தியன் 2’ படத்திற்கான பேச்சுவார்த்தைகள், படப்பிடிப்புகள் பல வருடமாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் சமீபத்தில் நடந்தது.
இசை வெளியீட்டு விழாவில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்த மறைந்த நகைச்சுவை கலைஞர்களான விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரைப் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த விவேக் அவர்களும், மனோபாலா அவர்களும் இப்போது நம்முடன் இல்லை, ஆனால் படம் வெளியான பின்பு நம்மோடு நிச்சயம் பயணிப்பார்கள். கமலஹாசன்- விவேக் ஆகியோரின் கெமிஸ்ட்ரி இப்படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது என்று பேசியுள்ளார் இயக்குனர் ஷங்கர்.