தமிழில் பேசுறத அவமானமா நினைக்காதீங்க.. ப்ளீஸ் கெஞ்சி கேட்குறேன்.. செல்வராகவன் எமோஷனல் பதிவு..

By John A

Published:

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சமூகக் கருத்துக்களைப் பதிவிட்டு பேசி வருகிறார். அதில் தன்னம்பிக்கை பேச்சுகள், அரசியல், சமூகம் என அனைத்தையும் பற்றி அவர் பேசி வருவது அவரது ரசிகர்களுக்கும், இளைஞர்களுக்கும் சிறந்த நம்பிக்கைப் பேச்சாக உள்ளது. அந்த வகையில் இன்று தாய்மொழியாம் தமிழ் மொழியின் அவசியம், சிறப்பு பற்றி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இயக்குநர் செல்வராகவன் அதில் பேசும் போது, “தமிழ்நாட்டு மக்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியு-வுல வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருக்கத் தக்கதா நினைக்குறாங்க.

ஸ்கூல், காலேஜ்ல இங்கீலீஷ்ல பேசமுடியாம அவமானப்பட்டு அழுதுருக்கேன். இங்கிலீஷே தெரியாம எப்படியோ கடைசி பென்ச்சுல இருந்து படிச்சு வெளியே வந்துட்டோம். அதுக்குப் பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு.. என்ன இங்கீலீஷ் தானா? இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், இங்கீலிஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்துலயே டிக்ஸ்னைரி வச்சுக்கிட்டு இதுக்கு இதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன்.

கொஞ்சம் கஷ்டமான பிராசஸ்தான். ஆனா படிக்கப் படிக்க கொஞ்சம் சரளமா பேச ஆரம்பிச்சு, ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சேன். நான் தமிழ். எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்-லேயே பேசுங்க. நல்லா உயர்த்திப் பேசுங்க. அவங்க உங்கள அவமானமா பார்த்தா முறைச்சுப் பாருங்க. அப்படி யாராவது உங்கள அசிங்கமா பார்த்தா அப்படி ஒரு ஆளே உங்களுக்குத் தேவையில்லை.

தமிழ்ல பேசுற தமிழ்நாட்டுப் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க. அவங்க அவங்க தாய் மொழியிலதான் பேசுவாங்க. இங்கிலிஷ்ல சப்-டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க..உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சி கேட்டுக்கிறேன். காலம் காலமா மனசுக்குள்ள இருந்ததை உங்ககிட்ட ஷேர் பண்ணிக்றேன்.”