விஜயகாந்துக்காக ஏவிஎம்மிடம் வசமாக சிக்கிய சுந்தரராஜன்… கைகொடுத்த கதாசிரியர்

By Sankar Velu

Published:

தமிழ்த்திரை உலகில் 80களில் கொடி கட்டிப் பறந்தவர் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன். இவரது இயக்கத்தில் வந்த அத்தனை படங்களுமே சூப்பர்ஹிட் தான். இவரது வாழ்விலும் ஒரு சோக சம்பவம் அரங்கேறியது. அது என்னன்னு பார்ப்போமா…

ஆர்.சுந்தரராஜனின் இயக்கத்தில் ‘நான் பாடும் பாடல்’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. அந்தப் படத்தில் ஹீரோவாக சிவகுமார் நடித்து இருந்தார். அப்போது பல தயாரிப்பாளர்கள் சுந்தரராஜனைத் தேடி வந்து கொண்டு இருந்தார்கள். அவர் சொன்ன ஒரே பதில் இதுதான்.

‘எனக்கு சொந்த வீடு வாங்க வேண்டும். அதை யார் வாங்கிக் கொடுக்குறீர்களோ அவர்களுக்குத் தான் எனது அடுத்த படம்’ என்றார். உடனே ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவர்கள் 2 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தார்கள். அதை வாங்கத் தயங்கினார். அதன்பிறகு ‘கதையை இன்னும் தயார் செய்யவில்லை’ என்றார். ‘அதுபற்றி கவலை இல்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என்றனர்.

Vaitheki Kathirunthal
Vaitheki Kathirunthal

அடுத்து சில நாள்களில் கதை தயாரானது. சுந்தரராஜன் சொன்ன கதையைக் கேட்டதும் ‘இதற்கு விஜயகாந்தை ஹீரோவாகப் போட்டால் பிரமாதமாக இருக்கும்’ என்றார். அதற்கு ஏவிஎம் சம்மதிக்கவில்லை. ‘இதற்கு முன் உங்கள் இயக்கத்தில் வெளியான நான் பாடும் பாடல் படத்திற்கு சிவகுமாரைத் தானே ஹீரோவாகப் போட்டீர்கள். அவரையே இந்தப் படத்திற்கும் ஹீரோவாக்குங்கள்’ என்றனர்.

அதற்கு சுந்தரராஜன், ‘வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்த் மட்டும் தான் பொருத்தமாக இருப்பார்’ என்றார். ‘அப்படியானால் கொடுத்த 2 லட்சத்தை திருப்பித் தாருங்கள்’ என்றனர். அங்கு தான் ஒரு சிக்கல் இருந்தது. என்னன்னா சுந்தரராஜன் ஏற்கனவே ஏவிஎம் கொடுத்த 2 லட்ச ரூபாயை புது வீடு வாங்க அட்வான்ஸாகக் கொடுத்து விட்டார்.

அப்படி என்றால் அந்தத் தொகையை எப்படி கொடுப்பது என்று தயக்கம் வந்தது. கைவசம் வேறு பணமும் இல்லை. அன்று மாலை சோகத்துடன் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவர் எதிரே கதாசிரியர் தூயவன் வந்தார். ‘என்னாச்சு?’ என்று கேட்க சுந்தரராஜன் விவரம் சொன்னார். ‘அவ்வளவு தானே என்று என்னுடன் வாருங்கள்’ என்றார். பஞ்சு அருணாச்சலம் வீட்டில் வைத்து கதை விவாதம் நடந்தது. வெள்ளைச்சாமி கேரக்டருக்கு விஜயகாந்தையே நடிக்க வைத்தார்கள். அதே போல சுந்தரராஜனுக்கும் 2 லட்சம் கொடுக்கப்பட்டது.

கதாசிரியர் தூயவன் வைதேகி காத்திருந்தாள் படத்தின் தயாரிப்பாளர் ஆனார். அதை ஏவிஎம்மிடம் திருப்பிக் கொடுத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார். இந்த உலகம் யாரையும் சோதிக்கும். ஆனால் கைவிடாது. முயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் உழைக்கும் எவருக்கும் இந்தப் பிரபஞ்சம் அவர்களது விடியலுக்கான அடுத்தடுத்த கதவுகளைத் திறக்கும் என்பது நிச்சயம்.