தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜி காலம் ஒரு பொற்காலம். அந்தக் காலத்தில் இருவரது படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ஓடும். ரசிகர்களும் அவ்வளவு வெறித்தனமாக இருப்பார்கள். கட்அவுட், பேனர், தோரணங்கள் கட்டுவதிலும் போட்டோ போட்டி தான்.
அப்படிப்பட்ட படங்களைக் கொடுத்தவர்களில் மிக முக்கியமான இயக்குனர் ப.நீலகண்டன். இவரது இயக்கத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவருக்குமே பல வெற்றிப்படங்கள் வந்துள்ளன. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கே அதிகமாக அதாவது 17 படங்கள் வரை இயக்கியுள்ளார். அவற்றைப் பற்றிப் பார்ப்போமா…
மாட்டுக்கார வேலன்
ஒரு பக்கம் பார்க்கிறாள், தொட்டுக் கொள்ளவா ஆகிய காதல் ரசம் சொட்டும் பாடல்களும், சத்தியம் நீயே என்ற கொள்கைப் பாடலும் படத்தில் முத்தானவை. 1970ல் ப.நீலகண்டன் இயக்கிய மாபெரும் வெற்றித் திரைப்படம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஜோடி பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தது.
இரட்டை வேடத்தில் எம்ஜிஆர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார்.
நினைத்ததை முடிப்பவன்
இந்தப் படத்தின் பெயரைக் கேட்டதுமே நம் நினைவுக்கு வருவது பூமழைத் தூவி வசந்தங்கள் வாழ்த்தும் என்ற பாடல் தான். எவ்வளவு அருமையான பாடல் என்பது இதைக் கேட்டு ரசித்தவர்களுக்குத் தான் புரியும். அடுத்து ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து என்ற பாடல். இன்னொரு தத்துவப் பாடல் கண்ணை நம்பாதே.
1975ல் ப.நீலகண்டன் இயக்கத்தில் உருவான மாபெரும் வெற்றிப்படம். லயிக்க வைத்ததோ எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. அதற்கு மேற்கண்ட பாடல்களே சாட்சி. மஞ்சுளா, லதா, சாரதா, நம்பியார், அசோகன், தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்ஜிஆர் இரட்டை வேடம்.
இந்தப் படத்தைப் பொறுத்த வரை வில்லன் நடிகர்கள் எல்லோரும் நல்லவர்கள். ஹீரோவோ வில்லன். படம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். இதுவரை பார்க்காதவர்கள் இப்போதே படத்தை இணையதளத்தில் ரசித்துப் பார்த்து விடுங்கள்.
நீதிக்குத் தலைவணங்கு
இந்தப் பச்சைக்கிளிக்கொரு என்ற ஒரு பாடலே போதும். படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. 1976ல் ப.நீலகண்டன் இயக்கியது. எம்ஜிஆருக்கு ஜோடி லதா. எம்.எஸ்.விஸ்வநாதன் வெகு ஜோராக இசை அமைத்துள்ளார்.
என் அண்ணன்
நீல நிறம், ஆசை இருக்கு நெஞ்சில், கடவுள் ஏன் கல்லானான், கண்ணுக்குத் தெரியாதா, நெஞ்சம் உண்டு ஆகிய பாடல்கள் செம மாஸ்.
ஜெயலலிதா ஜோடி. முத்துராமன், நம்பியார், அசோகன், சோ உள்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.மகாதேவன் இசை அமைத்துள்ளார். 1970ல் ப.நீலகண்டன் இயக்கத்தில் வெளியானது.
அம்பிகாபதி
சிவாஜி, பானுமதி நடிப்பில் ப.நீலகண்டன் இயக்கி 1957ல் வெளியானது. ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார். எம்.கே.ராதா, நாகையா, நம்பியார், ராஜசுலோச்சனா, என்.எஸ்.கிருஷ்ணன், கே.ஏ.தங்கவேலு உள்பட பலர் நடித்துள்ளனர்.