நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பினைப் பார்த்து கொண்டாடத உலக சினிமா ரசிகர்களே கிடையாது. எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி விடுவது அவரின் இயல்பு. இன்றும் பல புதுமுக நடிகர்களும், நடிப்புப் பயிற்சி பெறுபவர்களுக்கும் சிவாஜியின் நடிப்பு ஒரு பாடமாகவே விளங்குகிறது. ஆனால் நடிகர் திலகத்தின் நடிப்பினை ஓவர் ஆக்டிங் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.
ஆனால் இதனை அவரே ஒப்புக் கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார். எனது இரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதையே நான் செய்கிறேன். நான் எப்படி வேண்டுமோ அதே போல் நடித்துக் கொடுப்பேன். என்னால் இயல்பாகவும் நடிக்க முடியும். இருப்பினும் ரசிகர்கள் அதையே விரும்புவதால் அவ்வாறு நடிக்கிறேன் என்று விளக்கம் கொடுத்திருப்பார்.
அந்த வகையில் படையப்பா திரைப்படத்திலும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது. படையப்பா படம் 1999-ல் வெளிவந்தது. அதற்குமுன் இந்தியன் படமே தமிழ் சினிமாவில் அதிக வசூலைப் பெற்ற படமாக இருந்தது. அந்தச் சாதனையை படையப்பா முறியடித்தது. இந்தப் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.
அப்போதைய காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் போக்கு மாறியிருந்தது. ரசிகர்களும் மிகை நடிப்பை விரும்பாமல் யதார்த்த நடிப்பையே விரும்பினர். ஆனால் நம் நடிகர் திலகம் மிகை நடிப்பிற்குச் சொந்தக் காரர். இப்படி படையப்பா ஷுட்டிங்கின் போது, மணிவண்ணன் சொத்து பிரித்துக் கொடுங்கள் என்று கேட்பார். அப்போது சிவாஜி கணேசன் பேசும் ஒரு வசனம் வரும். இந்தக் காட்சியை எடுக்கும் போது நடிகர் திலகம் ஓவர் ஆக்டிங் செய்திருப்பார். ஆனால் அந்தக் காட்சிப்படி அந்த இடத்திற்கு இயல்பான நடிப்பே போதுமானதாக இருந்தது.
இதனை கே.எஸ்.ரவிக்குமார் நடிகர் திலகத்திடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார். இவ்வளவு பெரிய லிஜண்ட் நடிகருக்கு ரீடேக் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டே ரஜினி, லட்சுமி ஆகியோரைப் பார்த்திருக்கிறார். ஆனாலும் வேறு வழியில்லை. சொல்லியே ஆக வேண்டும்.
அப்போது நடிகர் திலகம் தனியாக செட்டில் அமர்ந்திருக்க அவர் அருகில் சென்று, சார் அந்த டயலாக் இன்னொரு முறை கூறிக் காட்டுங்கள் என்று கூறி கேட்க, நடிகர் திலகமும் கூற போதும் சார்.. இதை விட 1 சதவீதம் கூடுதலாக இருந்தால் போதும் என்று கூறிவிட்டு அவரின் முகத்தைப் பார்க்காமல் படக்குழுவினரை வேலை வாங்குவது போல் கட்டளையிட்டுக் கொண்டிருந்தாராம்.
இதனைக் கூர்ந்து கவனித்த சிவாஜி, கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து, “ டேய்.. இதுதான் வேண்டும் என்றால் நடித்துக் கொடுக்கப் போகிறேன். அப்போது நான் நடித்த போது பத்தல என்றார்கள் நான் ஓவர் நடிப்பைக் கொட்டினேன். இன்று ஓவர் ஆக்டிங் வேண்டாம் என்றால் குறைத்துக் கொள்ளப் போகிறேன்” என்று கூறிவிட்டு அந்தக் காட்சியை மீண்டும் நடித்துக் கொடுத்தாராம் நடிகர் திலகம். இதனை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார்.