பிரௌசிங் சென்டருக்கு வந்த இளைஞர்.. காதலர் தினம் படத்தின் ஹீரோவாக மாற்றிய இயக்குநர் கதிர்

By John A

Published:

இயக்குநர் கதிர் திரைப்படங்கள் அனைத்துமே காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களாகவே அமைந்திருக்கும். அதற்கு இதயம் படமே ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஒருதலை ராகம் போல் ஒருதலைக் காதலை இந்தப் படத்தினை விட சிறப்பாக வேறு படத்தில் காட்டியிருக்க முடியாது. இன்னும் அப்படி ஓர் படமும் வரவில்லை. இந்தப் படத்திற்குப் பின்னர்தான் நடிகர் முரளிக்கு இதயம் முரளி என்ற சிறப்புப் பட்டமே கிடைத்தது.

முதல் படத்தில் இளையராஜாவுடன் இணைந்து மெலடி சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த இயக்குநர் கதிர் அதன்பின் ஏ.ஆர்.ரஹ்மானுடன் கைகோர்த்தார். காதல் தேசம், காதலர் தினம் போன்ற படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தனர். இதில் 1999-ல் வெளியான காதலர் தினம் திரைப்படத்தல் குணால், சோனாலிபிந்த்ரே என புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். இந்தப் படம் நடிகர் குணாலுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

காதல் தேசம் படத்தை முடித்து விட்டு காதலர் தினம் படத்திற்கான பணிகளில் பெங்களுரில் தங்கியிருந்தார் இயக்குநர் கதிர். அப்போது அடிக்கடி பிரௌசிங் சென்டர் செல்வது வழக்கமாம். அந்த பிரௌசிங் சென்டரில் ஒருநாள் மஸ்ரூம் கட்டிங் ஹேர் ஸ்டைலுடன் ஓர் இளைஞர் வந்திருக்கிறார். அவரைக் கண்ட இயக்குநர் கதிருக்கு தன்னுடைய அடுத்த படத்திற்கான ஹீரோ இவ்வாறு இருந்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணி அந்த இளைஞருடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார்.

தொழில்நுட்பம் வளராத காலத்திலே இப்படி ஒரு ஐடியா பண்ணி ரஜினிகாந்த் பட பாடலை உருவாக்கிய இசைஞானி இளையராஜா…

அப்போது அந்த இளைஞர் தனது பெயர் குணால் என்று கூற, திரைப்படங்களில் நடிக்க விருப்பமா என்று கேட்டிருக்கிறார். தனது தந்தையிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று குணால் கூற மறுநாள் மீண்டும் இயக்குநர் கதிரைச் சந்தித்து அப்பா படங்களில் நடிக்க சம்மதம் கொடுத்துவிட்டார் என்று கூற அப்படி ஹீரோவானவர் தான் குணால். இந்தப் படத்தில் குணாலின் ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமானது. இதைப் போன்றே நம்மூர் இளைஞர்கள் பலர் தங்கள் ஹேர்ஸ்டைலை மஸ்ரூம் கட்டிங் போன்று வைத்துக் கொண்டனர்.

இயக்குநர் கதிர் இதேபோல் தான் அப்பாஸையும் பெங்களுரில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள பஃப்பில் சந்தித்திருக்கிறார். இப்படித்தான் தமிழ் சினிமாவில் குணாலையும், அப்பாஸையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கதிர். இதில் அப்பாஸ் சில வருடங்கள் தமிழ்சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால் குணால் துரதிர்ஷடவசமாக சில படங்களில் நடித்த பின் விபரீத முடிவை எடுத்து இவ்வுலக வாழ்வினை முடித்துக் கொண்டார்.