இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் சூப்பர் ஸ்டார் ரஜினியை அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தனது குருநாதர் மீது எவ்வளவு மதிப்பும், பற்றும் கொண்டிருந்தார் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. ரஜினி ஆரம்ப காலகட்டங்களில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். தினமும் அவரால் மதுஇன்றி இருக்க முடியாது.
ஒருமுறை கே. பாலச்சந்தர் இயக்கிய படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. அவருடன் நாகேஷ் உள்ளிட்டோரும் நடித்தனர். இந்நிலையில் அன்றைய தினம் ஷுட்டிங் முடிந்த பின்னர் இயக்குநர் பேக்அப் சொல்ல, வழக்கம் போல் ரஜினி வீட்டுக்கு வந்து மதுவைக் குடித்துள்ளார்.
அப்போது கே.பாலச்சந்தரிடமிருந்து அவசரமாக ஒரு போன் வந்துள்ளது. ஒரே ஒரு காட்சி மட்டும் எடுக்க வேண்டிய பாக்கி உள்ளது. எனவே அதனை முடித்துவிட்டுச் செல்லுமாறு போன் வர.. ரஜினி பதறிப் போயிருக்கிறார். காரணம் அவர் அப்போது மது குடித்திருந்தார். மேலும் தனது குருநாதரின் அழைப்பையும் தவற விட முடியவில்லை. எனவே உடனடியாகக் குளித்து விட்டு, வாயில் மௌத் பிரஷ்னர் உள்ளிட்டவைகளைப் போட்டு விட்டு, ஷுட்டிங் ஸ்பாட் சென்றுள்ளார்.
அப்போது ரஜினியைப் பார்த்த பாலச்சந்தர் அவரின் நிலையை அறிந்து கொண்டார். அப்போது அவரிடம் உனக்கு நாகேஷ் தெரியுமா? என்று கேட்டிருக்கிறார். ரஜினியும் தெரியும் என்று சொல்ல, எவ்வளவு பெரிய சீனியர் ஆர்டிஸ்ட் தெரியுமா? அவர் முன்னால நீ ஒரு துரும்புக்குக் கூட சமம் இல்ல. ஆனா அவரும் தண்ணியடிச்சுட்டு வாழ்க்கையை வேஸ்ட் பன்னிட்டார். நீயும் இனிமேல் ஷுட்டிங் ஸ்பாட்டில் தண்ணியடிச்சுட்டு வந்தா செருப்பால அடிப்பேன் என்று கடுங்கோபத்துடன் திட்டியுள்ளார்.
அன்று சபதம் எடுத்தவர் தான் ரஜினி. இனிமேல் எவ்வளவு மழை, குளிரானாலும் சரி ஷுட்டிங் நேரத்தில் ஒருசொட்டு ஆல்கஹால் கூட எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று உறுதி பூண்டிருக்கிறார். அதன்பின் சில வருடங்களில் மொத்தமாகவே மதுப்பழக்கத்திலிருந்து மீண்டு ஆன்மீகத்தின் பக்கம் நாட்டம் கொண்டு அறவே மறந்தார்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
