தமிழ்த்திரை உலகில் வெளியான சில படங்கள் தனித்துவம் வாய்ந்தது. அதற்குக் காரணம் அந்தப் படங்களில் வந்த கதாபாத்திரங்கள். அதற்கு 100 சதவீதம் பொருத்தமாக நடித்த நடிகர்களே படத்தோட வெற்றிக்குக் காரணம்.
அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தக் கேரக்டரை அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது. அப்படிப்பட்ட படங்களையும் அவர்கள் ஏற்ற கதாபாத்திரங்களையும் பார்ப்போமா…
மலைச்சாமி
சிவாஜிகணேசன் முதல் மரியாதை படத்தில் மலைச்சாமியாக நடித்தார். வெறும் நடிப்பு அல்ல அது. வாழ்ந்து காட்டினார். அந்தக் கதாபாத்திரம் அவருக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் தான் அவ்வளவு அர்ப்பணிப்பும் அந்தக் கதாபாத்திரத்தில் தெரிந்தது.
இந்த நடுத்தர வயதுடைய சிக்கலான கதாபாத்திரத்தை வேறு எந்த நடிகராலும் இவ்வளவு சிறப்பாகவும் யதார்த்தமாகவும் நடித்திருக்க முடியாது. 1985ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் சக்கை போடு போட்டது.
விஸ்வநாத அய்யர்
1996ல் கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் வெளியான படம் அவ்வை சண்முகி. ஜெமினிகணேசன் விஸ்வநாத அய்யராக நடித்து இருந்தார். அவ்வை சண்முகி மாமி மேல் ஒரு ரொமான்ஸ்சுடன் திரிவார். பேரப்பிள்ளைக்கு ஆயாவாக இப்படி மாமி வேடத்தில் வரும் கமல் அவ்வை சண்முகியாக வந்து கலக்குவார்.
ஜெமினிகணேசன் அந்தக் காலத்தில் காதல் மன்னன் என்பதால் அப்போதைய லுக்கையும் படத்தில் கொண்டு வந்ததால் அவரது நடிப்பு தனித்துவமாக இருந்தது. அந்தக் கதாபாத்திரத்தில் வேறு யாரை போட்டாலும் எடுபட்டிருக்காது.
வேலுநாயக்கர்
மணிரத்னத்தின் இயக்கத்தில் 1987ல் வெளியான படம் நாயகன். தமிழ் சினிமாவை ஹாலிவுட் லெவலுக்கு எடுத்துச் சென்ற படம். கமலின் இந்த வேலுநாயக்கர் பாத்திரம் மார்லன் பிராண்டோவுக்கு டான் விட்டோ கார்லியோனின் பாத்திரத்திற்குச் சமம்.
வேறு எந்த ஒரு நடிகரும் கமல் போல இவ்வளவு ஆர்வத்துடன் இந்தப் பாத்திரத்தில் பொருந்தியிருக்க முடியாது. கோபமான இளைஞன் பருவத்தில் இருந்து களைப்புடன் கூடிய வயதான டானாக வந்து அசத்தியிருந்தார்.
மாணிக் பாட்ஷா
1995ல் தமிழ்த்திரை உலகில் தனி முத்திரை பதித்த படம் பாட்ஷா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். இந்தப் படத்தில் மாணிக் பாட்ஷாவாக வரும் ரஜினி ஸ்டைலில் இதுவரை இல்லாத அளவு மாஸ் காட்டியிருந்தார். இது ஒரு இண்டஸ்டிரியல் ஹிட் சாதனை படைத்தது.
படத்தில் எனக்கு இன்னோரு பேரு இருக்கு. நான் ஒரு தடவை சொன்னா… என்ற பஞ்ச் டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன. இந்தக் கதாபாத்திரத்தை அவரைத் தவிர வேறு யார் செய்தாலும் எடுபட்டு இருக்காது.
தருமி
1965ல் நாகேஷ் திருவிளையாடல் படத்தில் ஏற்ற தருமி கேரக்டர். இந்தப் பாத்திரத்தில் அவர் நடிக்க வெறும் 2 நாள்கள் தான் கால்ஷீட் தேவைப்பட்டது.
ஆனால் படம் பார்க்கும்போது எவ்வளவு அற்புதமான நடிப்பு என்று எண்ணத்; தோன்றுகிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு எந்த நடிகரும் செட்டாகி இருக்க மாட்டார்கள்.
ஜில் ஜில் ரமாமணி
ஆச்சி மனோரமா ஏற்ற அற்புதமான கதாபாத்திரம். 1968ல் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தில் தான் இந்த கதாபாத்திரம் வருகிறது. நடிகர் திலகம் சிவாஜிகணேசனே அவரது நடிப்பைப் பார்த்து மிரண்டு போனார்.
அவ்வளவு அற்புதமான நடிப்பு. நடிகைகளில் இவரை மட்டும் தான் பொம்பள சிவாஜி என்பார்கள். இந்தக் கேரக்டரில் அவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது.
புரொபசர் ஞானப்பிரகாசம்
2007ல் வெளியான மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் புரொபசர் ஞானப்பிரகாசமான நடித்து அசத்தியிருப்பார். இந்தப் படத்தை இயக்கியவர் பிரகாஷ்ராஜ்.
எம்.எஸ்.பாஸ்கரின் இந்த வேடத்திற்குப் பொருத்தமானவர் மறைந்த எஸ்.வி.ரங்கராவ் அல்லது நாகேஷ். தனது இளம் வயது மகனின் மரணத்தால் ஏற்பட்ட பாதிப்பை கண்களில் காட்டினார். தனது மகன் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறான் என்ற எண்ணத்திலேயே வாழ்ந்தார். இது ஒரு சிக்கலான கதாபாத்திரம் தான். ஆனால் மிக மிக நேர்த்தியான நடிப்பு.