தென் இந்திய திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளவர் தான் நடிகை உதய சந்திரிகா. இவர் அதிகமாக கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள சூழலில், ஒரு சில மலையாள படங்களிலும், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
எம்ஜிஆருடன் ஒரு தாய் மக்கள், சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை உதய சந்திரிகா, பிரபலமான ஒரு கன்னட நடிகை என்பதுடன் மட்டுமில்லாமல் அவர் கன்னட திரையுலகின் பெரிய நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் கன்னட திரை உலகில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து வரும் உதய சந்திரிகா, டாக்டர் ராஜ்குமார், கல்யாண குமார், உதயகுமார், ராஜேஷ், விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத் உள்ளிட்ட நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார். அதே போல் தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், எஸ்.எஸ்.ஆர் உள்பட பல பிரபலங்களுடன் நடித்துள்ள அவர், தெலுங்கு திரையுலகில் கிருஷ்ணாவுடனும், மலையாள திரையுலகில் பிரேம் நசீருடனும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான தெய்வத்தின் தெய்வம் என்ற திரைப்படத்தில் தான் நடிகை உதய சந்திரிகா அறிமுகமாகி இருந்தார். அந்தப் படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இதனை அடுத்து அவர் எஸ் எஸ் ராஜேந்திரன் நடித்த ஆனந்தி, கலைஞர் கருணாநிதி வசனத்தில் உருவான அவன் பித்தனா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பெரிய மனிதன், ராஜாத்தி போன்ற படங்களில் நடித்த அவருக்கு மாடி வீட்டு மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் கிடைத்த கேரக்டர் தான் தமிழ் திரையுலகில் அவரை மக்கள் மனதில் நிற்க வைத்தது. இந்த படத்தில் அவர் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்திருந்த சூழலில் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
இதனையடுத்து சிவாஜிகணேசன் நடித்த சூப்பர் ஹிட்டான தில்லானா மோகனாம்பாள் திரைப்படமான பாலாஜியின் மனைவியாக அதாவது சிங்கப்பூர் மைனர் மனைவியாக நடித்திருந்தார். உதய சந்திரிகா திரை பயணத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தமாகவும் அது மாறி இருந்தது.
இதையடுத்து பெண் தெய்வம் படத்தில் நடித்த பின்னர் மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஒரு தாய் மக்கள் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் மீனா என்ற கேரக்டரில் நடித்து அசத்தியிருப்பார். இதனை அடுத்து எங்கள் தாய், சுவாதி நட்சத்திரம், பிரியாவிடை மற்றும் தசாவதாரம் போன்ற படங்களில் நடித்தார்.
மேலும் நடிகை உதய சந்திரிகா இரண்டு படங்களை தயாரித்துள்ளார். சந்திரிகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய அவர் இரண்டு கன்னட படங்களை தயாரித்தார். அதில் ஒரு படத்தில் விஷ்ணுவர்தன் நடித்திருந்த நிலையில் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது. நடிகை சந்திரிகா 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு நடிப்பதை நிறுத்தி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.