ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷ் படம்.. ராயனுக்குப் போட்டியாக களமிறங்கும் கொக்கி குமாரு..

By John A

Published:

நடிகர் தனுஷுக்கு தமிழ் சினிமாவில் நட்சத்திர அந்தஸ்து கொடுத்த படம் என்றால் அது புதுப்பேட்டை படம் தான். அவர் நடித்த முதல் மூன்று படங்களும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டவையே. துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடாதிருடி ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மாஸ் ஹீரோவாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த படம் என்றால் அது புதுப்பேட்டை படம் தான். அப்போது இந்தப் படத்தினைக் கொண்டாடத் தவறியவர்கள் இப்போது இந்தப் படத்தின் ஒவ்வொரு சீனையும் அணுஅணுவாக ரசிக்கின்றனர்.

இப்படி தனுஷின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்த படமான புதுப்பேட்டை படத்தில் சிநேகா, பாலாசிங், சோனியா அகர்வால், நம்பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். சென்னையின் ரவுடியிசத்தை அச்சு அசலாகக் காட்டியிருந்தார் இயக்குநர் செல்வராகவன். மேலும் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் தனுஷின் நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இதனையடுத்தே தனுஷுக்கு நல்ல நல்ல கதபாத்திரங்கள் கொண்ட படங்கள் வர ஆரம்பித்தது. குறிப்பாக வெற்றிமாறன் கூட்டணியுடன் அமைந்த பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது.

90‘S கிட்ஸ்-ஐ கவர்ந்த இந்த டியூன் எந்தப் பாட்டு மெட்டு தெரியுமா? பிள்ளையார் சுழி போட்ட இசைஞானி..

தற்போது புதுப்பேட்டை 2 கதைப் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்து இயக்கியிருக்கும் ராயன் திரைப்படம் வருகிற ஜுலை 26 அன்று வெளியாகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனையடுத்து தனுஷ் இளையராஜா பயோபிக்கில் நடிக்கிறார்.

இவ்வாறு தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிஸியான வேளையில் வருகிற ஜுலை 26 அவரின்பிறந்த நாள். இதனையொட்டி அவர் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே விஜய் நடித்த கில்லி, கமல் நடித்த விருமாண்டி போன்றவை அவரின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூல் வேட்டை செய்தது. இந்நிலையில் புதுப்பேட்டை படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராயன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய இரண்டு படங்கள் தனுஷுக்கு இந்த வருடம் பிறந்த நாள் ட்ரீட்டாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.