பெங்காலி மொழிப் படம் ஒன்றின் மூலம் (சாத் பென்சொமி) 1993 ஆம் ஆண்டு அறிமுகமாகி பின்னர் 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துப் புகழ் பெற்றவர் தான் தேவயானி. மும்பையைச் சேர்ந்தவரான தேவயானியின் இயற்பெயர் சுஷ்மா.
தேவயானியைப் பொறுத்தவரை, தமிழ் திரைப்படங்கள் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில், குடும்பப் பாங்கு, கவர்ச்சி, குணச்சித்திரம் உள்ளிட்ட எந்தவித வேடமானாலும், ஏற்று நடிக்கவே தயாராக இருந்தார். இதன் காரணமாகவே தொட்டா சிணுங்கி படத்தில் சற்று கவர்ச்சியான துணை கதாநாயகி வேடத்தில் நடித்திருந்தார். மேலும் பிரபு- சத்யராஜ் இணைந்து நடித்த சிவசக்தி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார்.
காதல் கோட்டை படத்தில், கமலி என்ற கதாபாத்திரத்தில், கவர்ச்சி துளியும் இன்றி கண்ணிய கதாநாயகியாக சிறப்பாக நடித்து, ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றார். படமும் அமோக வெற்றி அடைந்தது அது முதற்கொண்டு ராசியான நடிகையாக வலம் வந்த தேவயானி, கவர்ச்சிக்கு முழுக்குப் போட்டார். மேலும் இவர் நடித்த பாரதி படமும், அவருக்கு மீண்டும் மக்கள் மத்தியில், சிறந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
பூமணி படத்தில் முரளியுடன் தேவயானி ஜோடியாக நடிக்கும் போது அப்போது அந்த படத்தின் ஸ்டில் போட்டோ கிராபர் பூபதி, தேவயானி சார்ந்த சில புகைப்படங்களை எடுத்தார். அப்போது அவர் தேவயானி என்று பெயர் சொல்லி அழைத்து, புகைப்படத்திற்கு போஸ் தருவதில், சில திருத்தங்களைச் செய்து போஸ் தரும்படி சொன்னார். இதனால் கோபமான தேவயானி, தன்னை பெயர் சொல்லி அழைத்த ஒரே ஒரு காரணத்திற்காக, அவரைப் பலர் முன்னிலையில், கடுமையாகத் திட்டிவிட்டார்.
இந்தப் படமெல்லாம் எடுத்த இயக்குநர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியா? கலெக்டருக்குள் ஏற்பட்ட கலைத்தாகம்
சில நாட்கள் கழித்து, அந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற மணிவண்ணனுக்கு, நடந்த சம்பவம் தெரியவந்தது. உடனே அவர், தேவயானியைத் தனியே கூப்பிட்டு கண்டித்தார். பெயர் என்பதே மற்றவர்கள் அழைப்பதற்காகத்தான் வைக்கப்பட்டது. அந்தப் பெயரை, மற்றவர்கள் கூறி அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது? பெயரை மட்டும் உச்சரித்து விட்டு, மற்றபடி அவர் உங்களிடம், மரியாதையாகத்தானே பேசினார். இதில் என்ன தவறு இருக்கிறது?
உங்களை விட வயதிலும், திரையுலக அனுபவத்திலும், மூத்த நடிகர் மற்றும் இயக்குனரான என்னையே, இன்றும் பலர், பெயர் சொல்லி அழைப்பது வழக்கமாகவே இருக்கிறது. நான் அதை ஆமோதிக்கவே செய்கிறேன். எனவே அவரிடம், மன்னிப்பு கேட்டுக் கொள் என அறிவுறுத்தினார் மணிவண்ணன். இதற்கு இடையில், தேவயானியை வைத்து, பூபதி படம்பிடித்திருந்த ஸ்டில்ஸ் யாவும், மிக அருமையாகவும், சிறப்பாகவும், வந்திருந்தன. அவற்றைக் கண்ட தேவயானி உருகிப் போனார். உடனடியாக பூபதியை அழைத்து, அவரிடம் வருத்தம் தெரிவித்து, மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். அவருடைய நேர்த்தியான ஸ்டில்ஸ் திறமையைப், பாராட்டவும் செய்தார்.
நீ வருவாய் என பட இயக்குநர் ராஜகுமாரனுடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணம் முடித்தவர் தனது கணவர் இயக்கத்தில், இரண்டு தமிழ்ப் படங்களைச் சொந்தமாகத் தயாரித்தார். “காதலுடன்”, “திருமதி தமிழ்” என்ற அந்த இரண்டு படங்களுமே, படுதோல்விப் படங்களாக அமைந்தன. இதனால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய தேவயானி, பின்னர் படிப்படியாக, ஒரு வழியாக பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டார். திருமதி தமிழ் திரைப்படம், தேவயானி நடித்த 75வது திரைப்படம் ஆகும்.