வில்லன், காமெடி என இரண்டு காதாபாத்திரங்களிலும், அல்லது இரண்டும் கலந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்ப ஒரு சிலரால் மட்டும் தான் நிச்சயம் முடியும். அந்த வகையில் முக்கியமான ஒருவர் தான் பிரபல குணசித்திர நடிகர் கொச்சின் ஹனீபா.
இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். விஎம்சி ஹனிபா அல்லது கொச்சின் ஹனிபா என்று அழைக்கப்படும் இவர், கேரளாவில் உள்ள கொச்சின் பகுதியில் கடந்த 1951 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் அவர் திரைப்படத்துறையில் நுழைய விரும்பினார்.
கடந்த 1972 ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தில் அறிமுகமானாலும் அதன் பிறகு அவருக்கு இரண்டு ஆண்டுகளாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 1974 ஆம் ஆண்டு ’காலேஜ் கேர்ள்’ என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார். அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றதையடுத்து மலையாளத்தில் ஏராளமான படங்களில் தொடர்ந்து நடித்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வசனம் பேசுவதில் கொஞ்சம் மலையாள வாடை இருந்தாலும் தமிழில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தது. சிவகுமார், ராதிகா, மோகன், லட்சுமி நடித்து கலைஞரின் கதை வசனத்தில் உருவான பாச பறவைகள் என்ற திரைப்படத்தில் தான் அவர் வில்லன் கேரக்டரில் தமிழில் அறிமுகமானார். அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்ததால் இன்னும் நிறைய வாய்ப்புகளும் அவரை தேடி வந்தது.
குறிப்பாக மௌனம் சம்மதம், வைகாசி பொறந்தாச்சு, கோபுர வாசலிலே, வானமே எல்லை உள்பட பல படங்களில் நடித்தார். அவரது நடிப்புக்கு மிகச் சிறந்த பாராட்டு கிடைத்த படம் என்றால் அது கமல்ஹாசனின் மகாநதி படத்தில் தான். அவர் தனுஷ் என்ற வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து துள்ளித் திரிந்த காலம், காதலா காதலா, காக்கை சிறகினிலே, சுயம்வரம், முதல்வன், முகவரி, சிட்டிசன், யூத் ,மாறன், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் அந்த கேரக்டரில் அவர் காமெடியில் கலக்கி இருப்பார்.
அதேபோல் அஜித்தின் கிரீடம், ஏகன், விஜய் நடித்த வேட்டைக்காரன், ரஜினிகாந்த் நடித்த எந்திரன் போன்ற படங்களிலும் நடித்தார். நடிகர் ஹனிபா கடந்த 2010ஆம் ஆண்டு காலமான நிலையில் அவரது மறைவிற்கு பின்னர் வெளியான படங்கள் கற்றது களவு, அம்பாசமுத்திரம் அம்பானி, மதராசபட்டினம், எந்திரன் ஆகிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்தாலும் தொலைக்காட்சிகளில் அவரது காமெடி மற்றும் வில்லத்தனமான காட்சிகளை பார்க்கும் போது இந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் கூட கொஞ்சம் மெய்சிலிர்த்து தான் போகிறார்கள்.