படிப்பு முக்கியம் சிதம்பரம்.. மூன்று டிகிரி முடித்து நான்காவது டிகிரிக்குத் தயாராகும் காமெடி நடிகர்..

By John A

Published:

அசுரன் படத்தில் நடிகர் தனுஷ் தனது மகன் சிதம்பரத்திடம் கிளைமேக்ஸ் காட்சியில் நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவாங்க.. பூவா இருந்தா பிடிங்கிடுவாங்க..ஆனா படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்க முடியாது சிதம்பரம்” என்று மாஸ் வசனம் பேசுவார். இந்த வசனத்தை மெய்ப்பிக்கும் வகையில் தமிழ்சினிமாவில் நீண்டகாலமாக காமெடி நடிகராகத் திகழ்ந்து வரும்முத்துக்காளை தற்போது மூன்று டிகிரிகள் பெற்று நான்கவாது டிகிரி வாங்க படித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிகம் படித்தவர்கள் பட்டியலில் சார்லி இடம்பெற்றிருக்கிறார். முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர் தமிழ் சினிமா நடிகர்களில் அதிகம் படித்தவராக இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் சண்டைக் கலைஞராகப் பணியாற்ற ஆசைப்பட்டு சிலம்பம், ஜிம்னாஸ்டிக் போன்றவை கற்றுக் கொண்டு சினிமா ஆசையில் சென்னைக்கு வண்டி ஏறியவர்தான் நடிகர் முத்துக்காளை. ஆரம்ப காலகட்டத்தில் சில மாஸ்டர்களிடம் உதவியாளராகப் பணியாற்றி பின் நடிகர்களுக்கு டூப் போட்டு நடிப்பது என வேலைகளைச் செய்து வந்தார். அதன்பின் கவுண்டமணியுடன் பொன்மனம் படத்தில் முதன் முதலாக நடித்தார்.

நடிகர் வடிவேலு இவரை தன் குழுவில் இணைத்துக் கொண்ட பிறகு இவரது திறமை வெளியே தெரிய ஆரம்பித்தது. சண்டைக் கலைஞராக வாய்ப்பு கிடைக்கப் பெறாதவர் காமெடி நடிகராக ஜொலித்தார். குறிக்கா இவர் நடித்த செத்து செத்து விளையாடலாமா வசனம் வெகு பிரபலம். கராத்தே பயிற்சியிலும் பிளாக் பெல்ட் வெறுள்ளார். இப்படி திரையில் ஜொலிக்கும் முத்துக்காளைக்கு மனதில் ஓர் குறை. எப்படியாவது டிகிரி பெற்றுவிட வேண்டும் என்பது.

மொத்த பகவத் கீதையையும் ஒரே பாடலில் அடக்கிய கண்ணதாசன்.. கவிஞருக்கு நிகர் கவிஞரேதான்..

ஒருமுறை இவர் மகனை பள்ளியில் சேர்க்கப் போகும் போது பெற்றோர் கல்வித் தகுதியில் ஏதும் போடமுடியவில்லையே என்ற குறை இவரை உறுத்த படிக்க ஆரம்பித்திருக்கிறார். தற்போது 58 வயதாகும் முத்துக்காளை விடாமுயற்சியாகப் படித்து பி.ஏ., வரலாறு, எம்.ஏ., தமிழ்., பி.லிட் என மூன்று டிகிரிகளைப் பெற்றிருக்கிறார். தற்போது நான்காவதாக மற்றொரு டிகிரி வாங்க படித்துக் கொண்டிருக்கிறார்.

சன்டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு.. டூப்பு குக்கு ரியாலிட்டி சமையல் ஷோவில் பங்கேற்பாளராக கலந்து கொண்டு மற்றவர்களுக்கு உத்வேகம் தரும் வகையில் பேசிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கல்விக்கு வயது ஓர் தடையில்லை என்பதை முத்துக்காளை நிரூபித்து சாதித்துக் காட்டியிருக்கிறார்.