தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் வரிசையில் நாகேஷ்-க்கு அடுத்து சுருளிராஜன் அந்த இடத்தைத் தக்க வைக்க போராடி வந்த வேளையில் அவருக்குப் போட்டியாக காமெடியில் தனக்கென தனி ஸ்டைலை பின்பற்றியவர்தான் கல்லாப்பெட்டி சிங்காரம். கவுண்டமணி செந்திலுக்கு முன் 1980-90 வரையிலான காலகட்டங்களில் காமெடியில் கொடிக் கட்டிப் பறந்தார். இவர் நடித்த படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. பெரும்பாலும் கே.பாக்யராஜ் இயக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.
கல்லாப்பெட்டி சிங்காரம் 1966ஆம் ஆண்டு மோட்டார் சுந்தரம் பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சுவரில்லாத சித்திரங்கள், மௌன கீதங்கள், சட்டம் ஒரு இருட்டறை, ஒரு கை ஓசை, அந்த 7 நாட்கள், கன்னி ராசி, இன்று போய் நாளை வா, உதய கீதம், எங்க ஊரு பாட்டுக்காரன்,கிழக்கு வாசல் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஒல்லியான தோற்றம் கொண்டு நக்கலான பேச்சால் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்தார். இவர் சொந்தமாக நாடகக் குழு வைத்து பல நாடகங்களை மேடை ஏற்றியுள்ளார். பாக்யராஜ் சிங்காரமுடன் அறிமுகமான போது அவரது வெளிப்படையான தன்மை, நடிப்பு மற்றும் நடை, உடல் மொழி ஆகியவை அவரைக் வெகுவாக கவர்ந்ததால்.தொடர்ந்து பாக்யராஜ் இவரை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.
படத்திற்காக நிறத்தை மாற்றிய பழம்பெரும் நடிகை : கழுவி ஊற்றிய பிரபலங்கள் : வாயடைக்க வைத்த வெற்றி
பாக்யராஜ் முதன்முதலில் சிங்காரத்தை சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் தான் கல்லாப்பெட்டி சிங்காரத்தை அறிமுகப்படுத்தினார். பாக்யராஜூக்கும் இந்தப் படம் தான் அவரது இயக்கத்தில் வெளியான முதல் படம். கமல் நடித்த காக்கிச்சட்டை படத்தில் கமலை போலீஸ் வேலைக்குத் தயார் செய்யும் பொறுப்புள்ள அப்பாவாக நடித்து இருப்பார் கல்லாப்பெட்டி சிங்காரம். உதய கீதம் படத்தில் திருட்டு தொழில் செய்யும் கவுண்டமணியின் அப்பாவாக நடித்து நகைச்சுவையில் அசத்தி இருப்பார்.
இவர் செய்த காமெடி அனைத்துமே ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த அளவிற்கு இவரது நடிப்பு ரசிகர்களின் மனதில் பதிந்தது. கடைசியாக கிழக்கு வாசல் என்ற படத்தில் மட்டும் நடித்துவிட்டு தமிழ் சினிமாவை விட்டு விலகினார். கல்லாபெட்டி சிங்காரம் தனது கடைசி திரைப்படமான கிழக்கு வாசல் படத்தின் படப்பிடிப்பின் போது 1990-ல் தனது 52 வயதில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவர் இறந்த பின்பு தான் இவரின் கிழக்கு வாசல் படம் வெளியானது. இவர் 28 வயதில் சினிமாவில் எண்டரி கொடுத்து தனது தனித்துவமான குரலாலும் நடிப்பாலும் மக்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு எந்த அங்கீகாரமும், விருதும் பட்டங்களும் கிடைக்கவில்லை. ஆனாலும் இவர் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.