சிரிப்பு அரசனின் சீரியஸ் பக்கங்கள் : மீடியா வெளிச்சம்படாத கவுண்டமணி எப்பேற்பட்டவர் தெரியுமா?

By John A

Published:

ஒரு படத்தில் சிறிய கேரக்டர்களில் நடித்து ஆயிரம் இண்டர்வியூ கொடுக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் 800 படங்களுக்குமேல் நடித்து ஒரு இண்டர்வியூவில் கூட தலைகாட்டாத லெஜண்ட் என்றால் அது காமெடி கிங் கவுண்டமணிதான்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ, குடும்பம் குறித்தோ பொதுவெளிகளில் எங்கும் பேசாத கவுண்டமணியின் வாழ்க்கைப் பக்கங்கள் கொஞ்சம் சுவராஸ்யமானது. நடிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து காமெடியில் கவுண்டர் வசனங்களால் ரசிகர்களின் வயிற்றை புண்ணாக்கி சிரிப்பலையில் ஆழ்த்திய நடிகர்.

கவுண்டமணியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் கன்னம்மபாளையம் அருகே உள்ள பல்லகொண்டாபுரம். இவரின் சொந்த பெயர் சுப்பிரமணி. ஒரு முறை அவரது ஊரில் நாடகம் போட்டார்கள். அதில் இவர் கவுண்டர் வேடம் ஏற்று நடித்தார். இவரின் நடிப்பை பார்த்தவர்கள் அசந்துபோய் சுப்பிரமணியை அன்று முதல் கவுண்டமணி என்றே அழைத்தனர்.

கண்டிப்பா இந்தப் பாட்டு ஹிட் தான்.. ரெக்கார்டிங்கிலேயே கணித்த உண்ணிமேனன்

அம்மாவை ‘ஆத்தா’ என்றுதான் ஆசையாக அழைப்பார். வீட்டைத் தாண்டினால் ஆத்தா காலடியில் கும்பிட்டுவிட்டுத்தான் நகர்வார். மனைவி பெயர் சாந்தி. இரண்டு மகள்கள். செல்வி, சுமித்ரா. முதல் பெண்ணின் திருமணத்தின்போதுதான் அவருக்கு இரண்டு குழந்தைகள் என்கிற விவரமே தெரிய வந்தது. அவ்வளவு தூரம் மீடியா வெளிச்சம் படாமல் இருப்பார்!

ஆரம்பத்தில் சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். பின்னர் 16 வயதினிலே படத்தில் காமெடியனாக அறிமுகம் ஆனார். இதில் ரஜினியுடன் இவர் பேசும் “பத்த வச்சுட்டியே பரட்ட“ வசனம் இன்றும் பிரபலமான டயலாக்குகளில் ஒன்று. அதன்பிறகு அவர் காமெடியில் பெரிய அளவில் வலம் வந்தார். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் செந்திலுடன் சேர்ந்து 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இது ஒரு உலக சாதனையாகும்.

இன்றும் அதே எனர்ஜியுடன் நடனத்தில் மிரளவைக்கும் பிரபுதேவா : இப்படித்தான் Diet Follow பண்றாரா?

சரியாகப் படிப்பறிவு இல்லாத கவுண்டமணி ஓஷோவின் புத்தகங்களுக்கு இரசிகர். பெரும்பாலும் கருப்பு நிற உடைகளிலேயே வரும் கவுண்டமணி திருப்பதி ஏழுமலையான் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர். அடிக்கடி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் வழக்கம் கொண்டவர். பெரும்பாலும் அதிகம் பேசாத அமைதி விரும்பி. ஆனால் திரைப்படங்கள் என்று வந்துவிட்டால்  இவரது லொள்ளுக்கு அளவே கிடையாது.

சத்யராஜ், ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக், அர்ஜுன், அஜீத், விஜய், சிம்பு, பிரபு, என இவரிடம் கலாய் வாங்காத திரையுலக ஸ்டார்கள் மிகவும் குறைவு. கவுண்டரின் தி.நகர் ஆபீஸுக்குப் போனால் சின்ன வயதுக்காரராக இருந்தாலும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் சொல்வார். நாம் அமர்ந்த பிறகுதான் அவர் உட்கார்ந்து பேச்சை ஆரம்பிப்பார்!

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு சண்டை போடும் வேளையில் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்ளாமல் தன்னடக்கமாக இருப்பவர். ‘என்னடா, சார்லி சாப்ளின் அளவுக்கா சாதனை பண்ணிட்டோம். அவருக்கே பட்டம் கிடையாதுடா!’ என்பார்.