தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, கவுண்டமணிக்கு முன், கவுண்டமணிக்கு பின் என நகைச்சுவை காட்சிகளை பிரித்துக் கொள்ளலாம். என்.எஸ்.கிருஷ்ணன், தங்கவேலு, நாகேஷ் போன்றவர்களின் நகைச்சுவையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக, கவுண்டர் வசனத்தின் மூலம் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தி வந்தவர் கவுண்டமணி. அதிகார தொனி, மின்னல் வேகத்தில் வரும் வசனம், பார்த்தாலே சிரிக்க வைக்கும் முகம் போன்றவை கவுண்டமணியின் பிளஸ் ஆகும்.
தமிழ் சினிமாவில் முதல் முதலாக கலாய்ப்பதை நகைச்சுவை மூலம் அறிமுகம் செய்தவர் கவுண்டமணிதான். கலாய்ப்பதில் கவுண்டமணியை மிஞ்ச யாராலும் முடியாது. பல மூட நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் நகைச்சுவை மூலம் வெளிப்படுத்துவதிலும், ஒரு கொடூரமான வில்லனை கூட டம்மி ஆக்குவதிலும், அவரது நகைச்சுவை ரசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். கவுண்டமணி ஒரு காட்சியில் வந்துவிட்டார் என்றால், அவரது முகத்தை பார்க்க வேண்டிய அவசியமே இல்லை; நம் காதில் அவர் வசனம் விழுந்தாலே உடனே சிரிப்பு வந்துவிடும்.
ஹாலிவுட்டின் சார்லி சாப்ளின் போல, தமிழ் சினிமாவில் கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை மிகவும் ஆதிக்கம் செலுத்தியது என்பதும், கவுண்டமணி-செந்தில் இல்லாத படங்களே ஒரு காலத்தில் இல்லை என்ற அளவுக்கு தமிழ் சினிமா இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குரலை உயர்த்தி பேசுவது, எவ்வளவு பெரிய நாயகனாக இருந்தாலும் அவர்களை சர்வ சாதாரணமாக கலாய்ப்பது ஆகியவை கவுண்டமணியின் ரத்தத்திலே பிறந்தது. அதனால் சில பெரிய ஹீரோக்கள் தங்களுடைய படத்தில் கவுண்டமணி நடிக்க வேண்டாம் என்று நிபந்தனை விதித்ததாக கூட தமிழ் சினிமாவில் கூறப்படுவது.
டாம் அண்ட் ஜெர்ரியில் வரும் டாம் – ஜெர்ரி போலவே, கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை தமிழ் சினிமாவில் பிரபலம் என்பதும், குறிப்பாக செந்திலை உதைக்காத படம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலைதளங்கள் மற்றும் இன்டர்நெட் வந்த பிறகு, கவுண்டமணி-செந்தில் நடித்த காட்சிகளின் மீம்ஸ் மிக அதிகமாக பகிரப்படுகிறது என்பதும், வடிவேலுவுக்கு முன்பே சமூக வலைதளங்களில் கவுண்டமணி பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1970 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’ என்ற படத்தில் தான் கவுண்டமணி முதல் முதலாக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பே ‘சர்வ சுந்தரம்,’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக தோன்றியதால், அவரை மக்கள் அடையாளம் காண முடியாமல் போய்விட்டது.
திரையில் காமெடியனாக இருந்தாலும், அவர் மிகப்பெரிய அறிவாளி என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். குறிப்பாக ஓஷோவின் மேற்கோள்களை அவர் அடிக்கடி குறிப்பிடுவார் என்று, அவருடன் நெருக்கமாக பழகிய இயக்குனர் மணிவண்ணன் பல பேட்டிகளில் கூறியுள்ளார். ‘16 வயதினிலே’ படத்தில் சுப்ரமணியன் என்ற பெயரை பாரதிராஜா தான் கவுண்டமணி என்று மாற்றினார். அன்று முதல் அவர் கவுண்டமணி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி இன்றுவரை புகழ்பெற்ற காமெடிகளில் ஒன்றாக உள்ளது. கவுண்டமணி-செந்தில் கூட்டணி இணைந்து சுமார் 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளனர். ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் அறிமுகமானாலும், அதன்பின் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் படங்கள் கிடைக்கவில்லை. அதன்பிறகு ஆர்.சுந்தரராஜன் இயக்கிய ‘பயணங்கள் முடிவதில்லை’ என்ற படம் தான் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, ‘வைதேகி காத்திருந்தாள்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார் என்பதும், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 475 படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்து இருந்தாலும், அவர் கதாநாயகனாக 12 படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ‘பணம் பத்தும் செய்யும்,’ ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெறவில்லை என்பதால் மீண்டும் நகைச்சுவை பாதைக்கு திரும்பினார்.
சில படங்களில் கதாநாயகர்களை விட கவுண்டமணிக்கு பெயர் கிடைத்துவிடும்; அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரும் கவுண்டமணிக்கு நெருக்கமான நண்பர்கள். ‘மாமன் மகன்,’ ‘தாயின் மாமன்,’ ‘நடிகன்,’ ‘திருமலை பழனிச்சாமி’ உள்ளிட்ட படங்கள் கவுண்டமணியின் ஆளுமையை வெளிப்படுத்தும் படங்களாக அமைந்திருக்கும்.
செந்திலுடன் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும், ‘புது மனிதன்,’ ‘மைடியர் மார்த்தாண்டன்,’ ‘நடிகன்,’ ‘பிரம்மா,’ ‘சிங்காரவேலன்,’ ‘வியட்நாம் காலனி,’ ‘உழைப்பாளி,’ ‘மன்னன்’ போன்ற படங்களில் செந்தில் இல்லாமலே கவுண்டமணி காமெடியில் கலக்கினார்.
இன்றைக்கு இருக்கும் நகைச்சுவை நடிகர்களின் குருவாக கவுண்டமணி மதிக்கப்படுகிறார் என்பதும், அவரது காமெடி இன்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சிரிக்கும் அளவுக்கு இருக்கும் என்பதே அவரது காமெடி வெற்றிக்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.