தமிழ் சினிமாவில் பல காமெடி காட்சிகள் காலம் கடந்தும் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் ஒரு முக்கியமான காமெடி காட்சி தான், படையப்பா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்து அந்த பாம்பு புத்துக்குள்ள கையை விட்டீர்களே எப்படி என்ற வசனத்தை நடிகர் அனுமோகன் பேசும் காட்சிகள் தான்.
இந்த காட்சியில் அனுமோகன் கேட்கும் விதம் கூட நினைத்து நினைத்து சிரிக்க வைக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட அனுமோகன் ஒரு நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர் என பலருக்கு தெரிந்தாலும் அவர் இயக்குனராக படங்களை உருவாக்கி உள்ளார் என்பது பலரும் அறியாத உண்மை.
நடிகர் அனுமோகன் கோவையை சேர்ந்தவர். அதனால் தான் அவர் கோவை பாஷையில் திரைப்படங்களில் வசனங்கள் பேசுவார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த அவர் திரை உலகில் நுழைந்து சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். பல நிறுவனங்களில் வாய்ப்புக்காக ஏறி இறங்கிய நிலையில் தான் மோகன் நடித்த ‘அர்ச்சனை பூக்கள்’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் அறிமுகமானார்.
அதன் பிறகு அவர் விஐபி, மூவேந்தர் ஆகிய படங்களில் நடித்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படத்தில் சின்னராசு என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டர் தான் அவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
இதனை அடுத்து அவர் கண்ணோடு காண்பதெல்லாம், மின்சார கண்ணா, அன்புள்ள காதலுக்கு, பாட்டாளி, ஏழையின் சிரிப்பில், சந்தித்த வேளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 1999 முதல் அவர் தொடர்ச்சியாக சினிமாவில் பிஸியாக இருந்ததுடன் ஒரு ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து படங்கள் வரை நடித்துக் கொண்டிருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பேய் மாமா என்ற திரைப்படத்தில் கூட அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட திரையுலகில் இருந்து விலகிவிட்டார் என்றே கூறலாம். நடிகர் அனுமோகன் திரையுலகில் மட்டுமின்றி டப்பிங் கலைஞராகவும் இருந்தார். மாற்று மொழி திரைப்படங்கள் தமிழில் டப் ஆகும் போது பல கேரக்டர்களுக்கு அவர் குரல் கொடுத்துள்ளார். ரங்கீலா, ரவுடி பாஸ், டெல்லி, டைரி, உண்மை, க்ரைம் பைல், சென்னை காதல் உள்பட பல திரைப்படங்களில் அவர் குரல் கொடுத்துள்ளார்.
மேலும் அவர் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். பங்காளி, தாய்மாமன் ஆகிய படங்களின் கதை அவருடையது தான். அது மட்டுமின்றி அனுமோகன் சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். மோகன் ராதா அமலா நடித்த இது ஒரு தொடர்கதை, பிரபு முரளி நடித்த நினைவுச்சின்னம், அர்ஜுன் நடித்த மேட்டுப்பட்டி மிராசு, ராமராஜன் நடித்த அண்ணன் ஆகிய நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் அவர் இயக்கத்தில் உருவான நான்கு படங்களுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதால் அதன் பிறகு அவர் படங்களை இயக்கவில்லை.
மேலும் அனுமோகன் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரவனம், கோகுலம், வீடு, நந்தினி, ஜோதி, ஆகிய தொடர்களிலும் விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். மேலும் கனா காணும் காலங்கள் என்ற ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான தொடரில் அவர் ஆசிரியராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் அனுமோகன் ஒரு மிகச்சிறந்த ஜோசியர் ஆவார். அவர் பல சித்தர்கள் எழுதிய நூல்களை படித்துள்ளார் என்பதும் சித்தர்கள் எழுதிய வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அவர் படித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட 2024 ஆம் ஆண்டு பல இயற்கை பேரிடர் வரும் என சித்தர்கள் கூறியதாக அனுமோகன் தெரிவித்திருந்தார்.