இயக்குனர் டி.பி கஜேந்திரன் 80களில் இயக்குனர் விசு இயக்கிய பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார். பின்பு தன் குருநாதர் விசுவையே வைத்து வீடு மனைவி மக்கள் என்றொரு குடும்பத்தை இயக்கினார்.
சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமே தற்போதைய தலைமுறையால் அறியப்பட்ட இயக்குனர் டி.பி கஜேந்திரன் 80களில் பல சூப்பர் ஹிட் ஆக்சன் படங்களை இயக்கியவர்.
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இவர். இப்படங்களின் இசை இளையராஜா. இப்படங்கள் பாடல்களால் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு படங்களின் பாடல்கள் எல்லாமே மிக அருமையாக இருந்தது. இசை ரசிகர்களுக்கு பிடித்தமாக இருந்தது. அதிலும் கார்த்திக் நடித்த பாண்டி நாட்டு தங்கம் திரைப்படம் கிராமப்பகுதிகளில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.
வீடு மனைவி மக்கள், கொஞ்சும் கிளி, பெண்கள் வீட்டின் கண்கள், உள்ளிட்ட பல படங்களை இயக்கிய டி.பி கஜேந்திரன் சில படங்களின் தோல்விக்கு பிறகு 2000ங்களில் வந்த பட்ஜெட் பத்மநாபன், மிடில் க்ளாஸ் மாதவன் படங்களின் மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார்.
பார்த்திபனுடன் இவர் செய்த புளாசுளாக்கி காமெடி புகழ்பெற்றது. சீனா தானா, மகனே என் மருகனே படங்களுக்கு பிறகு இவர் பெரிதாக படங்கள் இயக்கவில்லை.