சீரஞ்சீவி முதல் படத்தை இயக்குனதே பாலச்சந்தரா… பலரையும் வியப்பில் ஆழ்த்திய தகவல்..

By Bala Siva

Published:

தெலுங்கு திரை உலகின் பிரபல நடிகராக இருப்பவர்களில் ஒருவர் தான் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்கள் கூட பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் ஹீரோவாக சிரஞ்சீவி நடித்த முதல் படத்தை இயக்கியது பிரபல தமிழ் இயக்குனர் கே பாலச்சந்தர் என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் அதுதான் உண்மை. அந்த படம் தான் 47 நாட்கள்.

கடந்த 1981ம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் தேதி இந்த படம் வெளியானது. பிரபல எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய 47 நாட்கள் என்ற நாவலை அதே பெயரில் படமாக்க பாலசந்தர் முடிவு செய்தார். அப்போது கதை டிஸ்கஷனுக்காக இருவரும் சந்தித்தபோது பாலச்சந்தர் கொஞ்சம் அச்சத்துடன் இருந்தாராம்.

47 நாட்கள் என்பது மிகவும் பிரபலமான ஒரு நாவல். அதை நான் மிகவும் கவனத்துடன் படம் எடுக்க வேண்டும். படம் சரியாக அமையாவிட்டால் சிவசங்கரியின் கதையை பாலச்சந்தர் கெடுத்து விட்டார் என்று சொல்வார்கள் என்று கூறினார். அதை பார்த்து சிவசங்கரி ஆச்சரியம் அடைந்தாராம். ஒரு மிகப்பெரிய இயக்குனர் என்னுடைய நாவலை படம் ஆக்குவதற்கு அச்சப்படுகிறார் என்று நான் ஆச்சரியமடைந்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த படத்தின் கதை என்பது சிரஞ்சீவி வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வந்து ஜெயப்பிரதாவை திருமணம் செய்வார். இதனை அடுத்து இருவரும் வெளிநாட்டுக்கு செல்வார்கள். அவர்கள் குடியிருந்த வீட்டின் அருகில் லூசி என்ற ஒரு பெண் இருப்பார். அவரை தனது மனைவியிடம் தோழி என அறிமுகம் செய்வார். அதேபோல் லூசியிடம் ஜெயப்பிரதாவை தனது தங்கை என்று அறிமுகம் செய்து இருவரையும் ஏமாற்றி வருவார்.

47 naatkal

அதன் பிறகு தான் ஜெயப்பிரதாவுக்கு லூசி தான் சிரஞ்சீவியின் முதல் மனைவி என்று தெரியவரும். இதனை அடுத்து அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதும் அவரை தப்பிக்க விடாமல் சிரஞ்சீவி துன்பப்படுத்துவது தான் இந்த படத்தின் கதை.

சிரஞ்சீவியிடம் ஜெயப்பிரதா வாழ்ந்த 47 நாட்கள் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் முழுமையான கதை. வெளிநாட்டிலிருந்து மாப்பிள்ளை வருகிறார் என்றவுடன் ஏமாந்து பலர் பெண் கொடுத்து விட்டு அதன் பின் வருத்தப்படுகிறார்கள் என்ற சமூக விழிப்புணர்வை இந்த படம் ஏற்படுத்தியது.

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளி வந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். மான் கண்ட சொர்க்கங்கள், தொட்டு காட்டிய மாப்பிள்ளை இவன், உன்னை நினைக்கும் போதே ஆகிய மூன்று பாடல்கள் இந்த படத்தில் இடம் பெற்றிருந்தன.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்த முதல் படத்தை இயக்கியது பாலசந்தர் தான் என்ற பெருமை மட்டும் இந்த படத்திற்கு உள்ளது தான் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.