தமிழில் இதுவரை பல பிக்பாஸ் சீசன் ஒளிபரப்பாகி இருந்தாலும் அதன் முதல் சீசனை நிச்சயம் எந்த காலத்திலும் ரசிகர்களால் மறக்க முடியாது. அந்த அளவுக்கு பல சுவாரஸ்யமான மற்றும் சர்ச்சை நிறைந்த விஷயங்கள் அதில் நடந்துள்ளது. இந்த ஒட்டுமொத்த சம்பவங்களில் முக்கியமான ஒன்று தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியாமல், சுவரேறி குதித்து தப்பிக்க பார்த்த நடிகர் பரணியின் செயல்.
இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், ஷங்கர் தயாரிப்பில் உருவான ’கல்லூரி’ என்ற திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். முதல் படமே கல்லூரி மாணவர் ரமேஷ் என்ற கேரக்டரில் நடித்த அவருக்கு சிறப்பான கேரக்டர் அமைந்ததுடன் மிக உணர்ச்சிப்பூர்வமாகவும் இதில் நடித்திருந்தார். இதற்கடுத்து பரணிக்கு கிடைத்த சிறந்த கதாபாத்திரம் என்றால், சசிகுமார் நடித்து சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான ’நாடோடிகள்’ திரைப்படம் மூலம் தான்.
இந்த படத்தில் சசிகுமாரின் நண்பராக, படம் முழுவதும் பயணம் செய்யும் பாண்டி அழகு சுந்தரம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் பரணி. காதலர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் காது கேட்கும் திறனை இழந்து பரிதாபமாகவும், அதே வேளையில் காமெடி கலந்தும் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தால் நடிப்பில் கலக்கி இருப்பார்.
இந்த படத்தை அடுத்து அவர் ’விலை’ ’தூங்கா நகரம்’ ’நேற்று இன்று’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் சசிகுமார் நடித்த ’வெற்றிவேல்’ திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். இதனை அடுத்து ’என்னம்மா கதை விடுறாங்க’ ’பணம் பதினொன்றும் செய்யும்’ ’பயமாயிருக்கு’ ’பொட்டு’ போன்ற படங்களில் நடித்தார். தொடர்ந்து, ’நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்ட போது முதல் நபராக அழைக்கப்பட்டவர் பரணி என்பதும் இந்த படத்தில் அவர் பாண்டியன் என்ற கேரக்டரிலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பிரபுதேவா நடித்த ’தேள்’ என்ற திரைப்படத்தில் வேல் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இது தவிர அநீதி உட்பட சில திரைப்படங்களில் நடித்தார். அநீதி படத்தில் அவர் நாயகன் அர்ஜுன் தாசின் கல்லூரி நண்பராக நடித்திருப்பார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் திரையுலகில் ஓரளவு பிரபலம் ஆகி கொண்டிருந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அப்போது அவர் போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் மற்ற போட்டியாளர்களுக்கு அவர் ஒரு சர்ச்சைக்குரியராகவே கருதப்பட்டார். அத்துடன் ஒரு கட்டத்தில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி சுவர் ஏறி குதிக்க தப்பிக்க முயற்சி செய்தார். இறுதியில் பிக் பாஸ் அவரை அழைத்து கண்டிக்கவும் செய்திருந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் அவர் அளித்த பேட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் சமூகமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நான் வெள்ளேந்தியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசியதால் அங்கு இருந்த ஒரு சிலரை தவிர அனைவரும் எனக்கு போலியாக தெரிந்தனர். அப்படிப்பட்ட இடத்தில் என்னால் ரொம்ப நாள் இருக்க முடியவில்லை. அது ஒரு மாயச் சூழல், என்னுடைய கேரக்டருக்கு அது சரியாக வரவில்லை, பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக என்னால் எதையும் செய்ய முடியாது. தொடக்கத்தில் ஒரு சில நாட்கள் டூர் வந்த மாதிரி இருந்தது, ஆனால் நாள் ஆக ஆக சூழ்நிலை மாறியது, பார்த்த முகத்தையே பார்த்து பேச வேண்டிய சூழ்நிலை, சரியாக தூக்கம் இல்லாமல் இருந்தது, இயல்புக்கு மாறாக இருக்க வேண்டிய நிலை ஆகியவை காரணமாக நான் வெளியே வந்து விட்டேன் என்று கூறினார்.
கிட்டத்தட்ட சென்னை நகரமும் பிக் பாஸ் நிகழ்ச்சி போல் தான் இருக்கிறது என்றும் சென்னைக்கு வரும் இளைஞர்கள் தினமும் ஒரே மாதிரி வேலை, ஒரே மாதிரி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்றும் பலர் மன அழுத்தத்தோடு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
கெட்டும் பட்டணம் போ என்பதெல்லாம் மலையேறிப் போச்சு, தற்போது கிராமத்துக்கு போ என்பது தான் உண்மையான நிலை என்றும் இயற்கையான நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல மண், சுகாதாரமான சூழ்நிலை, குடும்பத்துடன் வாழ வேண்டுமென்றால் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று வாழ வேண்டும் என்றும் பேட்டி கொடுத்திருந்தார். இந்த பேட்டி அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.