Bigg Boss Tamil 9 Day 2: பிக்பாஸுக்கே நிபந்தனை வைத்த திவாகர்.. பார்வதியின் நக்கல்.. “கண்ட்ரி ப்ரூட்” என திட்டு வாங்கிய திவாகர்.. ‘ஆட்டிட்யூட்’ காட்டும் விவேனா.. கன்டென்ட்டுக்கு பஞ்சமே இல்லாத 2வது நாள் எப்படி இருந்தது?

Bigg Boss Tamil Season 9 Episode 3 Day 2: பிக் பாஸ் சீசன் 9-இன் இரண்டாவது நாள் ஆட்டம், பிக்பாஸ் வீட்டின் அமைதியை முழுவதுமாக கலைத்து, அனலை கிளப்பியது. வந்திருப்பது வெறும்…

BB day 2

Bigg Boss Tamil Season 9 Episode 3 Day 2: பிக் பாஸ் சீசன் 9-இன் இரண்டாவது நாள் ஆட்டம், பிக்பாஸ் வீட்டின் அமைதியை முழுவதுமாக கலைத்து, அனலை கிளப்பியது. வந்திருப்பது வெறும் போட்டியாளர்கள் அல்ல, ‘கன்டென்ட்’ கொடுப்பதற்காகவே களம் இறக்கப்பட்ட ‘விர்ச்சுவல் வார்ரியர்ஸ்’ என்பதை நாள் 2 நிரூபித்தது. சண்டைகள், கண்ணீர், அதிரடி அணுகுமுறை என, வீட்டின் நிலைமை சீரியஸான ஒரு அரசியல் களத்தை ஒத்திருப்பதாகவே தெரிகிறது.

நாள் 2-இல் நடந்த முக்கிய சம்பவங்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகள் குறித்து விரிவாக பார்ப்போம்.

இரண்டாம் நாள் ஆரம்பிக்கும்போதே, போட்டியாளர்கள் எதிர்பார்க்காத ஒரு ‘ஸ்ட்ரோக்கை’ பிக் பாஸ் கொடுத்தார். தண்ணீர் தடை! முகத்தை கழுவுவது முதல், சமைப்பது வரை அத்தியாவசிய தேவைகளுக்கே தண்ணீர் கிடைக்காமல் போனது, உடனடியாக டென்ஷனை கிளப்பியது. இந்த தண்ணீர் பஞ்சமே நாள் முழுவதும் நடந்த சண்டைகளுக்கான அடிப்படை காரணமாக அமைந்தது. பிக் பாஸ், யாருமே எதிர்பார்க்காத இந்த அதிரடி முடிவு மூலம், போட்டியாளர்களின் இயல்பான முகத்திரைகளை கிழித்தார்.

தண்ணீருக்கான சண்டையில் முதலாவதாக மோதியவர்கள் விவேனா மற்றும் பிரவீன் ராஜ். தண்ணீர் எடுத்துவரும் பொறுப்பு குறித்து பிரவீனிடம் விவேனா கேள்வி எழுப்ப, பிரவீன் அலட்சியமாக முகத்தை திருப்பியதால், விவேனா கோபம் கொண்டார். ஆனால் அதே நேரத்தில் விவேனா கேட்ட கேள்வி நியாயமாக இருந்தாலும், அதை எடுத்து சொல்லும் ‘கோர்வையாக பேசும்’ திறன் அவரிடம் இல்லை. அவர் ஒரு ‘ஆட்டிட்யூட்’ காட்டுவதாகவே பிறருக்கு தோன்றுகிறது.

தற்போதைய சமூகத்தில் 2K கிட்ஸ்கள் பலரும் வீட்டில் வேலைகளை பகிர்ந்தளிப்பதில்லை. எல்லாவற்றையும் மற்றவர்கள் செய்து கொடுக்க பழக்கப்பட்டதால், எதிராளியிடம் தன் கருத்தை அழுத்தமாக பேசத் தெரியாமல், உணர்ச்சிவசப்பட்டு ரியாக்ட் செய்கிறார்கள். இந்த சமூக பின்னணியே விவேனாவின் இந்த பலவீனத்திற்குக் காரணம். இந்த பிரச்சினையை தீர்க்கத் தெரியாமல், பிரவீன் ராஜ் தனது அலட்சியமான அணுகுமுறையை காட்டிக்கொண்டே இருந்தார்.

நாள் 2-ன் மிகப்பெரிய மோதலாக உருவெடுத்தது திவாகர் மற்றும் ரம்யா-அரோரா இடையேயான வாக்குவாதம். சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருக்கும் ரம்யா, திவாகரிடம் வேலைகளை சொல்ல, அவர் கேள்வி கேட்க தொடங்கினார்.

“நாங்கள் சொல்வதை நீங்கள் செய்ய வேண்டும், கேள்வி கேட்கக் கூடாது” என்று ரம்யா சொன்னபோது, திவாகர் ‘ட்ரிகர்’ ஆனார். இந்த இடத்தில் ரம்யாவும், அரோராவும் திவாகரை “கண்ட்ரி ப்ரூட்” என்று குறிப்பிடுவதற்கான வார்த்தையை பயன்படுத்துவது, பெரும் சண்டையாக வெடித்தது.

இந்தச் சண்டையில் திவாகரை எதிர்ப்பதை அறிந்த மற்ற போட்டியாளர்களும், தங்களுக்கு புரோமோவில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக களேபரத்தில் குதித்தனர். கமரூதீன் முதலில் விளையாட்டாக வந்தாலும், திவாகரின் பிடிவாதத்தால் சண்டை சீரியஸ் ஆனது.

திவாகர் யாருடைய பேச்சையும் காதில் வாங்காமல், தான் நினைப்பதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த எஃப்ஜே ஒரு கட்டத்தில் “வெட்டிடுவேன்” என்று பேசுமளவுக்கு சண்டை மோசமடைந்தது. அடுத்த சில நிமிடங்களில் கமரூதீனும் திவாகரை உடல் ரீதியாக தள்ளிவிட்டார். சண்டையில் பங்கெடுத்தால்தான் பரபரப்பை ஏற்படுத்த முடியும் என்ற மனநிலைக்கு போட்டியாளர்கள் வந்துவிட்டது இந்த சம்பவத்தின் மூலம் தெளிவாக தெரிந்தது.

மோதலுக்கு பிறகு திவாகர் கேமராவை பார்த்துப் பேசியது, அவரது அகங்காரத்தின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டது. பிக் பாஸ் தன்னை “திவாகர்” என்று அழைப்பதை பற்றி வருத்தப்பட்டு, “வாட்டர்மெலன்”, “ரொமான்டிக் ஸ்டார்” என்று செல்லமாக அழைக்க வேண்டும் என்று கேட்டது, அவர் தன்னை எப்படி ஒரு ‘ஹீரோ மெட்டீரியலாக’ நம்பி இந்த வீட்டிற்குள் வந்திருக்கிறார் என்பதை காட்டுகிறது.

வெளியே இருக்கும் ‘ஃபேக் ஃபேமை’ நம்பி, அதை பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் எதிர்பார்க்கிறார். இமேஜ் குறித்த இந்த அதீத அக்கறை, அவரை சக போட்டியாளர்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகவும், இந்த குணம் நீண்ட நாட்களுக்கு பலன் அளிக்காது என்றும் விமர்சகர்கள் தெரிவித்தனர். மேலும் திவாகர் தனது தவறை உணராமல், தன்னை சுற்றியுள்ள உலகம் தவறாக நடந்துகொள்வதாக அவர் நம்புவது, அவர் சீரியஸாக விளையாடவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்த நாள் விவாதத்தில் மிகவும் முக்கியமான சமூக பிரச்சினையை கிளப்பிய இன்னொரு சம்பவம், சுபிக்ஷாவின் டாஸ்க். சூப்பர் டீலக்ஸ் வீட்டின் உறுப்பினராகிய வி.ஜே. பார்வதி, கிளீனிங் வேலைகளை செய்துகொண்டிருந்த சுபிக்ஷாவை ஒரு அதிகாரமான தொனியில் அணுகினார்.

கண்ணாடி சுத்தமாக இல்லை என்று கேள்வி கேட்ட சுபிக்ஷாவை, பார்வதி நக்கலான டோனில் பேசினார். இந்த அதிகார போக்கு, விவேனா அல்லது அரோரா போன்றோரிடம் அவர் பேசுவதில்லை. “எங்கிருந்து வருகிறார்கள்” என்பதை வைத்தே அந்த அதிகாரம் காட்டப்படுகிறது.

உயர் இடத்திலிருக்கும் ஒருவர் சத்தம் போட்டால், அதை ஏற்றுக்கொண்டு அடிபணிந்து நடக்கும் ‘அடிமை மனோபாவம்’ சமூகத்தில் இன்னும் இருப்பதால், அதை அந்த பெண் ஏற்றுக்கொள்ள நேரிடுகிறது. ஆனால், பார்வதியின் இந்த அணுகுமுறை, பிக் பாஸ் வீட்டில் சமூக ரீதியான ஏற்றத்தாழ்வு குறித்த கேள்வியை எழுப்புகிறது.

நாள் 2-ன் முடிவில், பிக் பாஸ் ஒரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்கை’ அரங்கேற்றினார். சண்டைக்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுப்பதை போல, அவர் கொடுத்த காலை உணவு முட்டையின் மூலம் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தார். விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டதை காரணம் காட்டி, திவாகரின் அருகில் இருந்த துஷாரை சூப்பர் டீலக்ஸ் வீட்டை விட்டு வெளியேற்றினார்.

அந்த இடத்திற்கு, விவேனா ஆர்வத்துடன் தானாகவே வர, அவருக்கு வாய்ப்பு கொடுத்து, வீட்டுக்குள் தனக்கு வேண்டிய ‘கன்டென்ட் ஸ்ட்ரக்சரை’ பிக் பாஸ் செட் செய்து கொண்டார். வெளியேறும் ஒருவரை விட, உள்ளே வரும் நபரால் என்னென்ன விஷயங்கள் நடக்க போகின்றன என்பதில் பிக் பாஸ் உறுதியாக இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 9-இன் இரண்டாவது நாள், வெறும் சண்டைகளை மட்டுமின்றி, சமூகத்தில் நிலவும் அகங்காரம், அதிகார போக்கு மற்றும் அடிமை மனோபாவம் போன்ற பல சீரியஸான உண்மைகளை வீட்டிற்குள் பிரதிபலித்துள்ளது.

திவாகரின் அணுகுமுறை, சுபிக்ஷா மீதான பார்பதியின் அதிகாரம் என அனைத்தும், ‘பகுத்தறிவு’ மற்றும் ‘சுய சிந்தனை’ ஆகியவை மக்களுக்குள் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த ‘சீரியஸ் கன்டென்ட்’ எவ்வளவு நாட்களுக்கு இந்த வீட்டை காப்பாற்றும், யார் அடுத்த கட்டத்திற்கு போவார்கள், யார் காணாமல் போவார்கள் என்பதற்கான விடை, இனிவரும் நாட்களில் தெரிந்துவிடும்!