Bigg Boss Tamil 9 Day 1: குறட்டை சண்டை.. யார் தமிழன் என்ற விவாதம்.. திவாகர் அட்ராசிட்டி.. புரிதல் இல்லாத கெமி.. நாமினேஷன் குழப்பங்கள்.. பிக்பாஸ் முதல் நாள் எப்படி இருந்தது? இந்த சீசன் தேறுமா?

Bigg Boss Tamil Season 9 Episode 2 Day 1: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் முதல் நாள், சலசலப்புகள், குழப்பமான டாஸ்க்குகள் மற்றும் சில…

BB day1

Bigg Boss Tamil Season 9 Episode 2 Day 1: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தொடங்கப்பட்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் முதல் நாள், சலசலப்புகள், குழப்பமான டாஸ்க்குகள் மற்றும் சில சர்ச்சைகளுடன் களைகட்டியுள்ளது. பிரம்மாண்ட அறிமுகத்திற்கு பிறகு, போட்டியாளர்கள் தங்கள் உண்மை முகத்தை முதல் நாளிலேயே வெளிப்படுத்த தொடங்கியுள்ளனர். முதல் நாளில் நடந்த முக்கிய சண்டைகள், வீட்டின் விதிகள் மற்றும் நாமினேஷன் குழப்பங்கள் பற்றிய விரிவான அலசல் இதோ:

வீட்டில் நாள் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, முதல் பெரிய மோதல் அரங்கேறியது. குறிப்பாக திவாகர் மற்றும் பிரவீன் ராஜ் ஆகியோருக்கு இடையே இரவு நடந்த குரட்டை பிரச்சனை, காலையில் விவாதமாக மாறியது. சாதாரண சண்டையில் இருந்து விலகி, திவாகர் தான் ஒரு பிசியோதெரபிஸ்ட் டாக்டர் என்றும், தான் ஐந்து படங்களில் நடித்ததாகவும், மக்கள் தன்னை நம்புவதாகவும் சம்பந்தமே இல்லாத விஷயங்களை இழுத்து வந்து ஒரு மணி நேரமாக சண்டையை திசை திருப்பியது பார்க்கும் நமக்கே எரிச்சலானது என்றால் வீட்டில் உள்ளவர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அவர் வெளியுலகில் செய்தது போலவே, இங்கும் தற்பெருமை பேச தொடங்கியிருப்பது எரிச்சலை ஊட்டுவதாக உள்ளது.

மேலும் வழக்கம்போல் இந்த சீசனில், வீட்டை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். ஒன்று பிக் பாஸ் பிக் பாஸ் ஹவுஸ். இது ஒரு சாதாரண ஹவுஸ் தான். இரண்டாவது பிக்பாஸ் டீலர்ஸ் ஹவுஸ். இந்த ஹவுஸில் உள்ளவர்கள் அதிக சலுகைகளை பெறுகிறார்கள். உதாரணமாக, நாமினேஷன் செய்யும்போது, இவர்கள் அதிகபட்சமாக 50% போட்டியாளர்களை மட்டுமே நாமினேட் செய்ய முடியும்.

முதல் நாளே வீட்டுக்குள் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. குளியல், சமையல், ஏன் ஃப்ளஷ் செய்வதற்குக்கூட டேங்கில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்த வேண்டிய சூழல் உருவானது. குழப்பமான ஒரு டாஸ்க் மூலம் தண்ணீர் மேலாண்மை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:

டேங்கில் தண்ணீர் நிரப்பப்பட வேண்டுமானால், இரு பொறுப்பாளர்களும் இரண்டு மூலைகளில் எரியும் லைட்டை கவனித்து, அது எரிந்த 10 வினாடிகளுக்குள் தண்ணீர் டேங்கை ட்ராலியில் தள்ளி, குறிப்பிட்ட இடத்தில் வைக்க வேண்டும். டீலர்ஸ் ஹவுஸிலிருந்து கமருதின் (சூப்பர்வைசர்) மற்றும் பிக் பாஸ் ஹவுஸிலிருந்து சபரிநாதன் (ஹெல்ப்பர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சபரிநாதன், தனக்கு கொடுக்கப்பட்ட ஹெல்ப்பர் பொறுப்பை தாண்டி, மிகவும் அர்ப்பணிப்புடனும் விழிப்புணர்வுடனும் செயல்பட்டார். யாராவது ட்ராலியை இடித்து விடுவார்களோ என்று கவலைப்பட்டு, பாதுகாப்பாக செயல்பட அறிவுறுத்தினார். ஆனால், சூப்பர்வைசர் கமருதின் சாதாரணமாகவும், பொறுப்பின்றியும் இருந்ததாக தெரிகிறது.

குடிநீர் டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் காத்திருந்தபோது, திவாகர் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தை பேச தொடங்கினார். வெள்ளையாக இருப்பவர்கள் எல்லாம் தமிழன் கிடையாது, கருப்பாக இருப்பவன்தான் மரத்தமிழன். நான் மரத்தமிழன்” என்று அவர் தேவையில்லாத பேச்சை ஆரம்பித்தார். இதற்குப் போட்டியாளர் FJ, ஹிப்ஹாப் தமிழாவின் பாடலை குறிப்பிட்டு, சரியான முறையில் பதிலடி கொடுத்தார்.

ஒரு சென்சிட்டிவ் தலைப்பு பேசப்பட்டபோது, சபரிநாதன் உள்ளிட்ட யாரும் எழுந்து நின்று திவாகரை எதிர்க்காதது ஏன் என்று கேள்வி எழுகிறது. திவாகரை கோமாளி என நிரூபிக்க சரியான வாய்ப்பு கிடைத்தும் யாரும் அதை பயன்படுத்தவில்லை. காலையில் குரட்டைக்காக சண்டை போட்டவர்கள் கூட, தமிழர் அடையாளத்தை பற்றிப் பேசும்போது மௌனம் காத்தது, பயத்தினால் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முதல் நாள் முடிவில், வாரத்தின் முதல் நாமினேஷன் நடைபெற்றது. ஆனால், இது மிகுந்த குழப்பத்துடனேயே அரங்கேறியது. பிரவீன் காந்தி போன்ற சில போட்டியாளர்கள், “எனக்கு நாமினேஷன் செய்ய விருப்பமில்லை, ஒரு நாள் மட்டுமே ஆகியுள்ளது” என்று கூறி, நாமினேஷன் நடைமுறையையே புரியாததுபோல நடித்தனர்.

நந்தினி, கலையரசன் பெயரை தவறாக கூறினார். ஆதிரை, கலையரசன் பெயரை மறந்துவிட்டதால், பிக் பாஸின் அனுமதியுடன் வெளியே சென்று பார்த்துவிட்டு வந்து நாமினேட் செய்தார். பெரும்பாலான போட்டியாளர்கள், “அவர் பேசாமல் இருக்கிறார்” அல்லது “அவர் ஓவராகப் பேசுகிறார்” போன்ற வலிமை இல்லாத காரணங்களை கூறினர்.

எனினும், ஆதிரை கூறிய ஒரு காரணம் பாராட்டப்பட்டது. “என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு, இந்த இடத்துக்கு வரலாம் என்று ஒரு தவறான முன்னுதாரணமாக திவாகர் இருக்கிறார்” என்று அவர் நாமினேட் செய்தார். இது பிக்பாஸ் ஆடிஷன் செய்தவர்களுக்கான தரமான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளியில் இருந்து வந்த கெமி, சபரிநாதனை நாமினேட் செய்தார். இதற்கு காரணமாக, சபரிநாதன் ஆரம்பத்தில் கை வலி இருப்பதாக கூறியதை சுட்டிக்காட்டினார். இது, ஆரம்பம் முதலே கெமி புரிதல் இல்லாமல் விளையாட ஆரம்பித்துவிட்டதை காட்டுகிறது.

முதல் வார நாமினேஷன் பட்டியலில் அதிகபட்சமாக கலையரசன் (12 வாக்குகளுடன்) இடம்பெற்றார். அவரை தொடர்ந்து திவாகர் (7 வாக்குகளும்), ஆதிரை (3 வாக்குகளும்) பட்டியலில் இணைந்தனர். வியானா மற்றும் அப்சராவும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றனர்.

மொத்தத்தில் முதல் நாள் முடிவில், இந்த சீசன் சற்று சலிப்பாக தொடங்கியிருப்பதும், யாரும் விளையாட்டை சீரியஸாக அணுகவில்லை என்றும் தெரிகிறது. கோடிக்கணக்கான மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வே இல்லாமல் அரட்டை அடிக்க வந்தது போல் தெரிகிறது. எனினும், சபரிநாதன் தனது பணியில் காட்டிய ஈடுபாடு மற்றும் விக்கல்ஸ் விக்கி அதிகம் பேசாமல், அனைவரையும் கவனித்து சரியான புள்ளியை கொடுக்கும் அணுகுமுறை பாராட்டத்தக்கது.