Bigg Boss Warning to Boys Team : பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் செல்ல செல்ல விறுவிறுப்பு அதிகமாகி கொண்டே போவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பும் அமோகமாக உள்ளது. ஆரம்பத்தில் எட்டாவது சீசன் வரவேற்பை பெறுமா பெறாதா என்று தான் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி இருந்தது.
ஆனால் அதே நேரத்தில் புதிய புதிய டாஸ்க்குகளும், சண்டைகளும், சர்ச்சைகளும் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிறைய விறுவிறுப்பை அதிகரிப்பதற்கான விஷயங்களும் உள்ளது. சமீபத்தில் அர்னவ் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதன் பின்னர், புதிய கேப்டனாக மீண்டும் ஒருமுறை தர்ஷிகா தான் தேர்வாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றிருந்த நிலையில், இந்த முறை ஆண்கள் அணி தான் அதிகமாக பொருட்களை வென்றிருந்தனர்.
இதன் பின்னர் ஆண்கள் அணியும் முதல் வாரத்தில் தங்களை யாரும் நாமினேட் செய்யக் கூடாது என பெண்கள் அணியிடம் கேட்டுக் கொண்டது தொடர்பாக மீண்டும் ஒருமுறை சர்ச்சை எழுந்து அது பெரிய அளவில் விவாதமாகவே வெடித்திருந்தது. முதல் நாளில் சம்மதம் சொன்ன பெண்கள் அனைவரும் இந்த வாரம் ஆண்களையும் சேர்த்து நாமினேட் செய்திருந்தது பல விதமான விமர்சனங்களையும் பெற்றிருந்தது.
ஆண்கள் பலரும் இது தவறு என்று கூறி விவாதத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதற்கு மத்தியில் தான் பிக் பாஸ் தற்போது புதிய டாஸ்க் ஒன்றையும் கொடுத்துள்ளார். பெண்கள் அணியில் இருக்கும் அனைவரும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை நடத்துவது போன்று மேனேஜர், ரிசப்ஷனிஸ்ட், ஹவுஸ் கீப்பிங் என பலரும் அந்த ரோலை நன்றாக செய்து வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ஆண்கள் அணியில் இருக்கும் அனைவரும் இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் விருந்தினர்களாக வருகின்றனர். அப்போது ஆண்கள் அணியினர் பலரும் மிக ஓவராக சுவாரஸ்யத்தை கூட்டாமல் சிரிப்பாக இருக்க வேண்டுமென ஏதேதோ செய்ய அது பார்ப்பவர்களுக்கே எரிச்சல் வரும் வகையில் தான் அமைந்திருந்தது.
இதனால் ஆண்கள் அணியினர் அனைவரையும் Confession ரூமுக்கு பிக் பாஸ் அழைத்திருந்தார். அப்போது அனைத்து ஆண்களுமே உடனடியாக சாரி என்று கூற ஏன் அப்படி சாரி கேட்டீர்கள் என்றும் பிக் பாஸ் கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் ஆண்கள், ஓவராக கத்திக் கொண்டிருந்ததாக அனைவரும் தெரிவித்தனர் என பதில் கூறுகின்றனர்.
தொடர்ந்து பேசும் பிக் பாஸ், “நீங்கள் அனைவருமே நகைச்சுவையாக செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சுவாரஸ்யம் என்பது நவரசம் அடங்கியது. அதற்காகத்தான் உங்கள் அனைவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுத்துள்ளோம். நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள் என்பதை பொறுத்து, உங்களுடைய பெர்ஃபார்மன்ஸ் வைத்து தான் ஹோட்டல் ஊழியர்களும் அவர்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்வார்கள். எதார்த்தமாக இருங்கள். இல்லையென்றால் உங்களுக்கும் பிரியப்படாது, பார்க்கும் பார்வையாளர்களுக்கும் பிரியப்படாது” எனக் கூறியுள்ளார்.
இதன் பின்னர் வெளியே வந்ததும் பெண்கள் அணியினரிடம் பேசும் தீபக், ‘நாங்கள் கொஞ்ச நேரம் ஒதுக்கி சிறப்பாக தயாராகி வருகிறோம். அதற்குள் நீங்களும் தயாராகி சிறப்பாக விளையாடலாம்’ என்றும் கூறுகிறார். பெண்கள் அணிக்கு சவாலாக இருக்க வேண்டுமென எரிச்சலடைய வைக்கும் வகையில் ஆண்கள் அணி செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.