தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவர் பாக்யராஜ். இவர் பல படங்களை இயக்கி உள்ளதுடன் நடிகராகவும் எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார். திரைக்கதையின் தந்தை என போற்றப்படும் அளவுக்கு பாக்யராஜின் திரைப்படங்களில் கதையம்சம் மிக சிறப்பாக இருக்கும். இதற்கிடையில், பாக்யராஜ் வில்லனாக நடித்த ஒரு படம் பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.
கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கன்னி பருவத்திலே’. பாக்யராஜ் மற்றும் பாலகுரு ஆகிய இருவரும் பாரதிராஜாவிடம் உதவியாளர்களாக இருந்த நிலையில் இருவரும் இணைந்து பணிபுரிந்த படம் தான் இது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாக்யராஜ் வில்லனாக நடிக்க பாலகுரு இந்த படத்தை இயக்கியிருப்பார். இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்து இருப்பார்கள். இந்த படத்தின் கதைப்படி ராஜேஷ் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டில் காளையை அடக்குவார். அப்போது அவரிடம் மனதை பறிகொடுக்கும் வடிவுக்கரசி அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புவார். இருவீட்டார்களும் சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைப்பார்கள்.
இந்த நிலையில் முதலிரவு வரும். அதில் ராஜேஷ் தனது மனைவியிடம் கூட நினைக்கும்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்படும். அப்போது டாக்டரிடம் சென்று காண்பிக்கும் போது மஞ்சுவிரட்டின் போது மாடு முட்டியதால் ஏற்பட்டதன் விளைவு தான் இது என்றும், இது எப்போது சரியாகும் என்று கூற முடியாது என்றும், நீங்கள் மனைவியிடம் சேராமல் இருப்பது தான் நல்லது என்றும் தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் கூறுவார்.
இதனால் ராஜேஷ் மற்றும் வடிவுக்கரசி ஆகிய இருவரும் அதிர்ச்சி அடைவார்கள். இந்த நிலையில் தான் ராஜேஷின் நண்பர் பாக்யராஜ் ஊரிலிருந்து கிராமத்துக்கு வருவார். அவர் ஆரம்பத்தில் வடிவுக்கரசியிடம் நண்பனின் மனைவி என்ற நிலையில் தான் பழகுவார். ஆனால் திடீரென ஒரு சம்பவம், இருவரையும் கட்டிப்பிடிக்கும் நிலை ஏற்படும். அப்போது ஏற்பட்ட ஒரு சின்ன சபலம் காரணமாக வடிவுக்கரசி பாக்யராஜை அணைப்பார். ஆனால் அதன்பின் பாக்யராஜ் அவளை அடைய நினைக்கும் போது திடீரென வடிவுக்கரசி சுதாரித்து எழுந்துவிடுவார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு தான் பாக்யராஜ், வடிவுக்கரசியை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று முயற்சி செய்வார். ஒரு கட்டத்தில் பாக்யராஜுக்கு ராஜேஷ் ஆண்மை இல்லாதவர் என்பது தெரிந்துவிடும். அதை வைத்து மிரட்டி வடிவுக்கரசியை டார்ச்சர் செய்து கொண்டிருப்பார். ஒரு பக்கம் கணவர், இன்னொரு திருமணம் செய்து கொள் என்று வற்புறுத்த, இன்னொரு பக்கம் பாக்யராஜ் டார்ச்சர் தாங்க முடியாமல் அவஸ்தையில் இருக்கும் வடிவுக்கரசி என்ன முடிவெடுத்தார் என்பது தான் கிளைமாக்ஸ்.
இந்த படம் ராஜேஷுக்கு சிறந்த படமாக அமைந்திருந்தது. வடிவுக்கரசியின் கண்ணம்மா கேரக்டர் தான் இந்த படத்தின் முதுகெலும்பு. அவர் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்திருந்தது.
பாக்யராஜ் கையில் கிடைத்தால் கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்ற அளவுக்கு ரசிகர்கள் அவரது கேரக்டர் மீது கோபமாக இருந்தார்கள். புதிய வார்ப்புகள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த பாக்யராஜ் வில்லனாகவும் அசத்திய படம் ’கன்னிப்பருவத்திலே’ என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கர் கணேஷ் இசையில் உருவான ஆவாரம் பூமணி, நடைய மாத்து, பட்டு வண்ண ரோசாவாம் ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகின. ’16 வயதினிலே’ மற்றும் ’கிழக்கே போகும் ரயில்’ ஆகிய படங்களை தயாரித்த எஸ்ஏ ராஜ்குமார் தான் இந்த படத்தின் தயாரித்திருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று பல நகரங்களில் 100 நாட்கள் ஓடி இருந்தது. இந்த படம் வெளியாகி 43 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றும் இந்த படத்தின் கதை பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும்.