நட்பு என்பது எந்த ஒரு குறிப்பிட்ட வயதினரை மட்டும் சார்ந்தது அல்ல. நட்பையும் நண்பர்களையும் எந்த வயதிலும் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம். நட்புக்கு வயது, மொழி, இனம், நாடு என எந்த தடையும் கிடையாது.
நட்பை கொண்டாடும் மக்கள் இருப்பதால்தான் திரையுலகில் நட்பை மையமாக வைத்து வெளியாகும் திரைப்படங்கள் வெற்றி பெற்று இன்றளவிலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன. இப்படி நட்பை மையமாக வைத்து வெளியான சிறந்த சில தமிழ் திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. தளபதி:
நட்புனா என்னன்னு தெரியுமா? என்ற கேள்விக்கு பதிலாக இன்றளவும் நட்புக்கு இலக்கணமாக பல திரைப்பட ரசிகர்களுக்கு இருக்கக்கூடிய படம் தளபதி. மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம். கர்ணன் மற்றும் துரியோதனனின் நட்பை போல இதில் சூர்யா (ரஜினிகாந்த்) மற்றும் தேவாவின் (மம்முட்டி) கதாபாத்திர வடிவமைப்பு, மற்றும் இருவருக்கும் இடையேயான ஆழமான நட்பு காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக என்றும் ரசிகர் மனதில் நிலைத்திருக்கக் கூடியது.
2. நட்புக்காக:
கே.எஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமாரின் வெற்றி கூட்டணியில் உருவான படம் நட்புக்காக. பணக்கார பண்ணையரான விஜயகுமாருக்கும் விசுவாசம் மிக்க வேலையாளாக உள்ள சின்னையாவிற்கும் (சரத்குமார்) இடையேயான நட்பை அழகாக எடுத்துரைக்கும் படம். நண்பரின் மகளை காப்பாற்றுவதற்காக சிறைக்குச் சென்ற சின்னையாவின் நட்பும் தன் நண்பன் இறந்த அதிர்ச்சியில் தானும் உயிரை விடும் பண்ணையாரின் நட்பும் எத்தனை முறை பார்த்தாலும் கண்கலங்க வைக்கும்.
வரவிருக்கும் நண்பர்கள் தினம்… உங்கள் நண்பருக்கு இந்த சாக்லேட் பிரவுனி செய்து அசத்துங்கள்!
3. பிரண்ட்ஸ்:
சித்திக் அவர்களின் இயக்கத்தில் விஜய் மற்றும் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பிரண்ட்ஸ். இதில் உள்ள நகைச்சுவை காட்சிகள் பலருக்கும் பிடித்தமானது. அரவிந்த் (விஜய்) மற்றும் சந்துரு (சூர்யா) இவர்களுக்கு இடையே உள்ள அசைக்க முடியாத நட்பு தான் கதைக்களம். பல சதிகளாலும் சூழ்ச்சிகளாலும் பிரிக்க முடியாத இவர்களது நட்பு அரவிந்த் சிறு வயதில் செய்த ஒரு மிகப்பெரிய தவறின் விளைவாக பிரிந்து விடும். இறுதியில் இந்த இரு நண்பர்களும் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கிளைமேக்ஸ்.
4. பிரியமான தோழி:
இயக்குனர் விக்ரமனின் இயக்கத்தில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரியமான தோழி. அசோக் (மாதவன்) மற்றும் ஜூலியின் (ஸ்ரீதேவி) நட்பை அழகாக காட்டும் திரைப்படம். அசோக் தன் தோழி ஜூலி தந்தையின் மறைவுக்குப் பின்பு தன் தோழிக்காக நிற்கும் பொழுதும், தன் தோழியின் பிடித்த வாழ்விற்காக தன்னுடைய லட்சியத்தை தியாகம் செய்யும் பொழுதும் அசோக் மற்றும் ஜூலியின் நட்பு திரைப்படம் என்பதையும் தாண்டி வியக்க வைக்கும்.
5. நண்பன்:
இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம். பஞ்சவன் பாரிவேந்தன் (விஜய்), வெங்கட் ராமகிருஷ்ணன் (ஸ்ரீகாந்த்) மற்றும் சேவற்கொடி செந்தில் (ஜீவா) ஆகிய மூவரின் கல்லூரி கால நட்பை பற்றிய படம். கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் சேட்டைகளையும் குறும்புகளையும் அழகாக காட்டப்பட்டிருக்கும் திரைப்படம். தன் நண்பர்களை அவர்களுக்கு பிடித்தமான இலட்சியத்தை நோக்கி கவனம் செலுத்த செய்யும் பஞ்சவன் பாரிவேந்தனின் வித்தியாசமான கதாபாத்திரம் பலருக்கும் பிடித்தமான ஒன்று.