வரவிருக்கும் நண்பர்கள் தினம்… உங்கள் நண்பருக்கு இந்த சாக்லேட் பிரவுனி செய்து அசத்துங்கள்!

நண்பர்கள் என்றாலே அனைவருக்கும் ஸ்பெஷலானவர்கள் தான். நட்பினை கொண்டாடாதவர்களாக யாராலும் இருக்க முடியாது. தன் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், வேலை செய்யும் இடத்தில் அலுவலக நண்பர்கள் மட்டுமின்றி சமூக வலைத்தளத்திலும், நாம் தினமும் பயணம் செய்யும் போக்குவரத்து மூலமாகவும் நமக்கு பல நண்பர்கள் தினமும் அறிமுகமாகிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

அறிமுகமாகும் அத்தனை பேருமே நண்பர்களாகி விட முடியாது. அதில் ஒரு சிலர்தான் என்றும் நம் வாழ்வில் நிலைத்திருக்கும்படி சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். நம் வாழ்வின் இன்பங்களை பகிர்ந்து கொள்ள, கஷ்ட காலங்களில் நமக்கு துணையாக இருக்க இப்படி வாழ்வின் முக்கிய அங்கமாக இருப்பது ஒரு சில நண்பர்கள் தான். அந்த நண்பர்களை கொண்டாடும் விதமாக பல நாடுகளும் நண்பர்கள் தினத்தை கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு நாடுகளும் வெவ்வேறான நாட்களில் நண்பர்கள் தினத்தை கொண்டாடுகின்றன. இந்தியாவில் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் (2023) நண்பர்கள் தினம் ஆகஸ்ட் மாதத்தின் 6ஆம் தேதி வரவிருக்கிறது.

அனைவருக்குமே நம் மனதிற்கு பிடித்தவர்களோடு சேர்ந்து பிடித்தமான உணவை உண்பது என்றால் மிகவும் சந்தோஷத்தை தரும். இந்த நண்பர்கள் தினத்தன்று எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாத அனைவரையும் மீண்டும் சாப்பிட வைக்கும் சாக்லேட் பிரவுனியை செய்து உங்கள் நண்பருடன் பகிர்ந்து நண்பர்கள் தினத்தை கொண்டாடுங்கள்.

istockphoto 1324094156 612x612 1

சாக்லேட் பிரவுனி என்பது ஒரு பிரபலமான இனிப்பு வகையாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகை. மிகவும் எளிமையான இந்த இனிப்பு வகை அற்புதமான சுவையோடு அனைவருக்கும் பிடிக்கக் கூடிய ஒன்று. ரெஸ்டாரன்ட் மற்றும் காபி ஷாப் களில் கிடைக்கும் இந்த சாக்லேட் பிரவுனியை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்ப்போம்!

சாக்லேட் ப்ரவுனி செய்ய தேவையான பொருட்கள்:

istockphoto 927545542 612x612 1

  • குக்கிங் சாக்லேட் – 200 கிராம்
  • வெண்ணெய் – 115 கிராம்
  • சீனி – 200 கிராம்
  • மைதா – 120 கிராம்
  • முட்டை – 3
  • கொக்கோ பவுடர் – 2 ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை
  • வெண்ணிலா எசன்ஸ் – ஒரு மேஜை கரண்டி
  • முந்திரி மற்றும் பாதாம் – கால் கப்
  • வெண்ணெய் பேப்பர் – தேவையான அளவு
சாக்லேட் பிரவுனி செய்யும் முறை:

பிரவுனி தயாரிப்பதற்கு 30 நிமிடங்கள் முன்பாக தேவையான பொருட்களை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து வெளியில் வைத்து விட வேண்டும்.

குக்கிங் சாக்லேட் தூள் தூளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெந்நீர் வைத்து வெந்நீர் கொதித்ததும் குறைந்த தீயில் வைத்து விட வேண்டும்.

மற்றொரு கிண்ணத்தில் நறுக்கிய சாக்லேட் தூளினை சேர்த்து அடுப்பில் உள்ள வெந்நீர் பாத்திரத்தினால் வைக்க வேண்டும்.

சாக்லேட் உருக தொடங்கியதும் அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

சாக்லேட் மற்றும் வெண்ணெய் நன்கு கலந்து ஒன்றாக ஆனதும் அவற்றை இறக்கி சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்து ஆற வைத்து விட வேண்டும் ‌‌.

brownie 2

மற்றொரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்ற வேண்டும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும்.

இதனுடன் கொக்கோ பவுடர் மைதா மாவு ஆகியவற்றை சலித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இப்பொழுது ஏற்கனவே உள்ள சாக்லேட் கலவையுடன் இதனை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.

முந்திரி, பாதாம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

brownie 1

அனைத்தும் கலந்ததும் ஒரு ட்ரெயில் வெண்ணையை தடவி அதில் பட்டர் பேப்பர் வைத்து சாக்லேட் கலவையை ஊற்றி விடவும்.

அவனில் வைக்கும் முன்பு அவனை 350 டிகிரிக்கு முன்பே சூடு செய்து இந்த ட்ரேயை வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து எடுக்கலாம்.

அவ்வளவுதான் சுவையான பிரவுனி தயார்!

இதனை உங்களுக்கு விருப்பமான வடிவில் சதுரமாகவோ, வட்டமாகவோ, செவ்வகமாகவோ நறுக்கி பரிமாறலாம். நட்ஸ்க்கு பதிலாக சாக்லேட் சிப்ஸ் பயன்படுத்தலாம்.  மேலே ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் சிரப் ஊற்றி பரிமாறலாம். உங்கள் நண்பருக்கு பிடித்த வடிவில் பிடித்த சுவையில் செய்து நண்பருடன் பகிர்ந்து நண்பர்கள் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews