தமிழ் மற்றும் இந்திய மொழி திரைப்படங்களில் மிகவும் அரிதாக தோன்றும் சில கதாபாத்திரங்கள் இருக்கும். அந்த வகையில் வரும் கதாபாத்திரங்களில் நடித்த மிகவும் முக்கியமான ஒரு நடிகர் தான் பாப் கிறிஸ்டோ. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் படங்கள் மற்றும் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும், ஏராளமான ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த 1938 ஆம் ஆண்டு பிறந்தவர் பாப் கிறிஸ்டோ. இவர் ஒரு சிவில் இன்ஜினியர். ஆனால் அவருக்கு திரைப்படங்களில் நடிப்பதில் தான் மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. ஆங்கில படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இவர் இந்தியாவிற்கு வந்து இந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது..
கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் முறையாக ஒரு ஹிந்தி படத்தில் அறிமுகமான பாப் கிறிஸ்டோ, அதன் பிறகு ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்தார். குர்பானி, கோப்ரா, ஸ்டார், நாஸ்திக் போன்ற சூப்பர் ஹிட் ஹிந்தி படங்களில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல் முறையாக அவர் கமல்ஹாசன், அம்பிகா நடித்த ‘காக்கி சட்டை’ என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு ஸ்டண்ட் காட்சிகளுக்கு மட்டும் நடித்திருந்தார்.
அதன் பிறகு கமல்ஹாசனுடன் மீண்டும் காதல் பரிசு என்ற படத்தில் நடித்தார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் விடுதலை, சிவா, அதிசய பிறவி ஆகிய மூன்று படங்களில் பாப் கிறிஸ்டோ நடித்துள்ளார். அவர் ரஜினியுடன் மோதும் ஸ்டண்ட் காட்சியில் அதிகம் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் சண்டை மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் வரும் கதாபாத்திரங்களில் தான் நடித்துள்ளார்.

மேலும் அவர் ரஜினிகாந்த் நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான ’பிளட் ஸ்டோன்’ என்ற படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருப்பார். மேலும் விஜயகாந்த் நடித்த கூலிக்காரன், பாக்யராஜ் நடித்த என் ரத்தத்தின் ரத்தமே உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ள இவர், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் இந்தி படத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. இந்தி திரைப்படங்களில் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் பிரெஞ்சு தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி பெங்களூரில் பாப் கிறிஸ்டோ காலமானார். அவரது உடல் சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
