இயக்குனர் அட்லி, விஜய்யை வைத்து மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கிவிட்டார். ஷாருக்கான் படத்தையும் இயக்கிவிட்டார். தற்போது அல்லு அர்ஜுனையும் இயக்குவதற்கான முயற்சிகளில் அவர் உள்ளார். ஆனால், ரஜினி மற்றும் அஜித் ஆகிய இருவரையும் தனித்தனியாக வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதுதான் அட்லியின் நீண்ட நாள் கனவு. அந்த கனவு இன்னும் கைகூடி வராத நிலையில், தற்போது அஜித்துக்கு அவர் சொன்ன ஸ்கிரிப்ட் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஸ்கிரிப்ட்டில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டால், அட்லி உடனே அல்லு அர்ஜுன் படத்திலிருந்து விலகி, அஜித் படத்திற்கு வந்து விடுவார் என்றும் திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ‘ராஜா ராணி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, அட்லியை அஜித்திடம் நயன்தாரா அறிமுகப்படுத்தியதாகவும், அப்போதே ‘உங்களுக்காக ஒரு கதை ரெடி பண்ண போகிறேன்’ என்று சொன்ன அட்லிக்கு, ‘தாராளமாக ரெடி பண்ணிட்டு வா, உனக்காக நான் நடித்துக் கொடுக்கிறேன்’ என்று அஜித் வாக்குறுதி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
அதன்பிறகு, சுரேஷ் சந்திரா மூலமாக அட்லி, அஜித்தை நேரில் சந்தித்து பலமுறை கதை சொல்ல முயன்றாலும், அது நடைபெறவில்லை. அட்லியும் தொடர்ந்து புதிய படங்களில் கமிட்டாகிவிட்டதால், அஜித்தை கிட்டத்தட்ட மறந்துவிட்டார். ஆனால் தற்போது, ‘அஜித்தின் அடுத்த இயக்குனர் யார்?’ என்பது முடிவெடுக்கப்படும் நிலையில், அவரது ‘குட் புக்’ல் அட்லி இடம் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
‘இனிமேல் மாஸ் படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும், அதற்கு ஏற்ற இயக்குனரே தேவை’ என்று அஜித் முடிவு செய்துவிட்டதாகவும், ‘ஆதிக் ரவிச்சந்திரன் எனக்கு ஒரு நல்ல வழியை காட்டிவிட்டார்’ என்று தனது நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அஜித், ‘ஒரு ஹீரோவை மாஸாக ரசிகர்களுக்கு காட்டும் இயக்குனருக்கே தான் இனி வாய்ப்பு’ என்றும் கூறியதால், அவரது பட்டியலில் முதலிடத்தில் அட்லி இருப்பதாக தெரிகிறது.
இதனால், அடுத்த படத்துக்கு அட்லியை தேர்வு செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் அல்லு அர்ஜுன் படத்தை இயக்க அட்லி ஒப்புக்கொண்டுவிட்டதால், அந்த படத்தை முடித்துவிட்டு தான் அஜித் படத்துக்கு செல்வார் என்றும், அல்லு அர்ஜுன் படத்தை கைவிட்டு அஜித் படத்தை இயக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அஜித் அக்டோபர் மாதம் வரை கார் ரேஸில் பிஸியாக இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் தான் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அஜித்தின் அடுத்த படத்தை அட்லி இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.