பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் தற்போது குடும்பத்தினர் அனைவரும் வருகை தந்து முடித்துள்ள சூழலில் போட்டியாளர்களின் நண்பர்கள் ஒவ்வொரு ஆளாக வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் சிலரின் காதல் நிறைவேறிய தருணமாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சில அழகான நிமிடங்கள் அமைந்திருந்தது. கடந்த பிக் பாஸ் சீசனின் வெற்றியாளரான அர்ச்சனா, அருண் பிரசாத்தின் காதலி என அனைவருக்குமே தெரியும்.
ஆனால் அதனை நேரடியாக அருண் தெரிவிக்காமல் மறைமுகமாக தனது காதலை பற்றியும் பல கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இதனிடையே அருண் பிரசாத்தின் பெற்றோர்கள் வந்த சமயத்தில் அர்ச்சனாவும் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஒருமுறை வருவார் என்று தான் அனைவருமே எதிர்பார்த்தனர். ஆனால் அந்த சமயத்தில் வராத அர்ச்சனா, தற்போது போட்டியாளர்களின் நண்பர்கள் வருகை தந்த சமயத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருந்தார்.
காதல் தருணங்கள்
அப்போது அர்ச்சனாவுடன் ஈரோடு மகேஷும் பிக் பாஸ் வீட்டுக்குள் முத்துக்குமரன் மற்றும் அஞ்சலி ஆகிய இருவரின் நண்பர்கள் என்ற அந்தஸ்துடன் வர அந்த தருணமே அழகாக இருந்தது. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே அர்ச்சனா நேரடியாக அருண் பிரசாத்தை சென்று கட்டியணைத்தது எமோஷனலாக இருந்ததுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
தொடர்ந்து அனைத்து போட்டியாளர்களிடமும் இதுதான் தனது காதலி என அறிமுகம் செய்து வைத்த அருண் பிரசாத்திற்கு அனைவருமே வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இதனிடையே அருண் பிரசாத்திடம் தனியாக பேசிக் கொண்டிருந்த அர்ச்சனா, “நான் உன்னை ரொம்ப அதிகமாக மிஸ் செய்தேன். எனது வீட்டில் அனைவருமே ரொம்ப மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்கள் அனைவருக்குமே உன்னை மிகவும் பிடித்து போய்விட்டது.
அர்ச்சனா – அருணுக்கு விரைவில் கல்யாணம்?
சீக்கிரம் வெளியே வா. எனக்கு அதிக நேரம் இல்லை” என அர்ச்சனா தெரிவிக்கிறார். அப்போது பேசும் அருண் பிரசாத், “ஏன் சீக்கிரமாக வர வேண்டும். உன்னை அனுப்ப முடிவு செய்து விட்டார்களா?” என கேட்க, அதற்கு ‘ஆமாம்’ என்றும் சிரித்துக் கொண்டே அர்ச்சனா பதில் தெரிவிக்கிறார்.
அதாவது அர்ச்சனாவின் திருமணம் தொடர்பாக அவரது வீட்டில் பேசி வருவதாகவும் அதற்காக தான் அருண் பிரசாத்தையும் சீக்கிரமாக வெளியே வரும்படியும் அர்ச்சனா தெரிவித்ததாகவும் தெரிகிறது.