இந்த வார்த்தை வேண்டாம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான்.. முடியாது என அடம்பிடித்த வைரமுத்து.. கடைசியில் கலக்கிய ஹரிஹரன்

By John A

Published:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் ஒரு பாடல் உருவாக்கத்தில் ஒரு வார்த்தைக்காக இருவரும் சண்டையிட்டு கடைசியில் ஹரிஹரன் அதை சரி செய்து பாடியிருக்கிறார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நாகார்ஜுனா நடிப்பில் இயக்குநர் பிரவீன் காந்த் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த  திரைப்படம்தான் ரட்சகன். அப்போது ஏ.ஆர்.ரஹ்மான் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து இந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருந்தார். ஆக்சன் படமான ரட்சகனின் தீம்மியூசிக்கை கேட்டால் இன்றும் அந்தப் படத்தில் நாகார்ஜுனாவிற்கு நரம்புகள் புடைப்பது போல நம் நரம்புகளும் புடைக்கும். அதே வேளையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு மெலடி பாடல்தான் சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்ற பாடல்.

இனி நானே நினைச்சாலும் இப்படி ஒரு குத்துப்பாட்டை போட முடியாது.. வித்யாசாகர் சொல்லி அடித்த கில்லி ‘அப்படிப் போடு‘ பாடல்

இப்பாடல் பதிவின் போது கவிப்பேரரசு வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் டியூனைக் கேட்டு சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா என்று எழுதியுள்ளார். இதனைப் படித்துப் பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் இதில் ஆம்ஸ்ட்ராங்க் என்ற வார்த்தையை மாற்றி எழுதித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் வைரமுத்து விடாப்பிடியாக இந்த வார்த்தை தான் இருக்க வேண்டும் என்று கூற இருவருக்கும் இடையில்  அவருடைய இசையா? இல்லை இவரது பாடலா என்ற சலசலப்பு வந்திருக்கிறது.

பிறகு வைரமுத்து ஒரு முடிவிற்கு வந்து இந்தப் பாடலை பாடப்போவது யார் என்று கேட்க ஏ.ஆர்.ரஹ்மானோ ஹரிஹரன் என்று கூற, சரி அவர் வரட்டும் வந்து பாடலை கேட்டு இந்த வார்த்தை வேண்டாம் என்றால் நாம் நீக்கி விடுவோம். இல்லாவிடில் இந்த வார்த்தையையே வைத்துக்கொள்வோம் என்று கூறியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவழியாகச் சம்மதிக்க பின்பு ஹரிஹரன் வந்த பிறகு வைரமுத்து பாடலைக் காட்ட ஹரிஹரன் ஆம்ஸ்ட்ராங்க் என்ற வார்த்தையைக் கேட்டு வைரமுத்துவைப் பாராட்டியிருக்கிறார்.

மேலும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த வார்த்தையால் ஏற்பட்ட சிறிய இசை பிரச்சினையை பாடல் பதிவின் போது தனது மென்மையான குரலில் சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்டராங்கா என்று பாட ஏ.ஆர்.ரஹ்மான் பிடித்துப் போய் பதிவு செய்திருக்கிறார். பின்னர் இந்தப் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இதனை வைரமுத்து நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.