வில்லனுக்கே வில்லனாக நடித்த தமிழ் சினிமாவின் சர்வாதிகாரி.. மிரட்டல் நடிப்பில் அதிர வைத்த நம்பியார்

By John A

Published:

வில்லன்களுக்கே வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கே இலக்கணம் எழுதியவர் எம்.என்.நம்பியார். சினிமாவில் முரட்டு வில்லனாக கண்களை உருட்டி, கைகளைப் பிசைந்து இவர் நடிக்கும் காட்சிகள் யாராக இருந்தாலும் சற்று கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். இதுதான் அவரது கதாபாத்திரங்களுக்குக் கிடைத்த வெற்றி.

நாடகக் குழுவில் சமையல் உதவியாளராக தன் வாழ்க்கையைத் துவக்கிய மாஞ்சேரி நாராயணன் நம்பியார் பின் படிப்படியாக உயர்ந்து ‘கவியின் கனவு’ என்ற நாடகத்தில் ராஜகுரு வேடம் ஏற்று, முதல் வில்லன் நடிப்பை மேடையில் வெளிப்படுத்திப் புகழ்பெற்றார். அப்பொழுது இவர் வயது 23.

“ராஜகுமாரி“ (1947) என்ற திரைப்படந்தான், எம்ஜிஆரை இவருடன் இணைத்த முதற் படம். ஆனால் அதில் வில்லன் பாத்திரம் கிடையாது. ஆனால் அதன்பின் வந்த சர்வாதிகாரி படம் தான் திரைப்பட உலகில் இவருக்கு பெருந் திருப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படமே எம்..ஜி.ஆர் கதாநாயகன் – நம்பியார் வில்லன் என்ற கூட்டணியை இத் திரைப்படம் உருவாக்கியது. இப்படத்தில் இடம்பெற்ற வாள் சண்டை இருவருக்குமே தனித்த முத்திரையாக அமைந்தது தனிச் சிறப்பு.

தேவர் மகன் படத்துல கமல் தவிர முதலில் இருந்தது இவங்கதான்.. உலக நாயகன் செஞ்ச மாற்றத்தால் மாபெரும் வெற்றி கண்ட வரலாறு

எம்.ஜி.ஆர் முதல் சரத்குமார் வரை பல தலைமுறைக் கதாநாயகர்களுடனும் திரையில் வில்லனாகத் தொடர்ந்த ஒரே நடிகர் நம்பியார். எம்.ஆர்.ராதா, பி.எஸ்.வீரப்பா, கே.ஏ.அசோகன் போன்ற பெரிய வில்லன் நடிகர்களையும் திரைப்படங்களில் மிரட்டிய வில்லாதி வில்லன் இவர் மட்டும்தான் என்றால் அது மிகையாயாகாது. அதுமட்டுமின்றி அன்றைய காலத்து சம நடிகர்களான சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோருக்கும் வில்லனாக நடித்தார்.

இவரை எல்லோருமே வில்லனாகப் பார்த்தாலும், “ரகசியப் போலீஸ் 115“, “பாசமலர்“, “கண்ணே பாப்பா“ போன்ற திரைப்படங்களில் இவரது குணசித்திர வேடங்களை பார்த்து கண்கலங்கியவர்கள் பலர்.

இவர் பெரும் ஐயப்ப பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரி மலைக்கு புனித யாத்திரையை மேற்கொண்ட ஒரு நடிகர். 1942இல் இவரது முதல் புனித யாத்திரை ஆரம்பமாயிற்று. மேலும் சக நடிகர்களையும் சபரிமலை அழைத்துச் சென்று குருசாமியாகவும் விளங்கிய நம்பியார் தன் 89 -வயதில் வயோதிகத்தால் காலமானார்.