ராக் ஸ்டார் இப்போ ராபரி ஸ்டார்… தொடர் சர்ச்சையில் அனிருத்!

By Nithila

Published:

கோலிவுட்டில் தற்போது மிக பிசியாக, முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத்.

இவர் இசையைக் கேட்டாலே கொண்டாட்டம் என்கிற அளவுக்கு தொடர்ந்து அவரது பாடல்கள் மக்களை ஈர்த்து வருகிறது. இளம் வயதில், புகழின் உச்சியில் இருக்கும் அனிருத்தை பார்த்து வியக்காதவர்கள் இல்லை. தொடர்ந்து, பல வெற்றி படங்களின் பின்னால், அனிருத்தின் இசை பக்கபலமாக இருந்து வருகிறது.

‘விடாமுயற்சி’, ‘தலைவர் 170’, ‘தலைவர் 171’, ‘இந்தியன் 2’ என தொடர்ந்து பல படங்கள் அனிருத் இசையில் திரைக்கு வர காத்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இவரின் இசையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் இடம் பெற்ற பாடலை, அனிருத் ஆங்கிலப் பாடல் ஒன்றிலிருந்து காப்பி அடித்து விட்டதாக சொல்லப்பட்டு வருகிறது.

‘லியோ’ படத்தில் ஹெய்னாவுடனான சண்டைக்காட்சிக்கு பின் வரும் பாடல் ‘Ordinary person’. இந்தப்பாடல் ‘Peaky Blinders’ எனும் ஆங்கில வெப்சீரிஸில் இடம் பெற்ற ‘Where are you’ என்ற பாடல் போல இருக்கிறதே என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

‘Peaky Blinders’ வெப் சீரிஸின் ரசிகர்கள், இதை பொறுக்க முடியாமல், அந்த பாடலை உண்மையில் உருவாக்கிய இசையமைப்பாளர் ‘Otnicka’ வின் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சென்று உங்கள் பாடலை அனிருத் திருடிவிட்டார் என கமெண்ட் செய்து உள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ந்து போன ‘Otnicka’ இது குறித்து தனக்கு எதும் தெரியவில்லை என்றும், ‘லியோ’ பற்றி எனக்கு தொடர்ந்து தெரியபடுத்திக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை. அவ்வளவு பதிவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

இதுகுறித்து தனது குழுவினருடன் ஆலோசித்து விட்டு பதில் தருவதாக கூறியிருக்கிறார். மேலும், நான் யார் மீதும் எந்தவிதமான குற்றச்சாட்டையும் வைக்கவில்லை என பதிவிட்டிருக்கிறார். இதற்கு முன்பும் இது போன்ற குற்றச்சாட்டுகள் வந்தாலும், காலப்போக்கில் அது மறக்கப்பட்டு விட்டது.

இது போன்ற குற்றச்சாட்டுகளை தவிர்க்க முறையாக அனுமதி பெற்று பாடல்களை பயன்படுத்தலாம். வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் தொடர்ந்து சிக்கினால் பெற்ற புகழ் மற்றும் இனி வரும் வாய்ப்பு எல்லாவற்றையும் இழக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவது நல்லது.

Tags: aniruth, Leo