Perplexity AI நிறுவனத்தின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த CEO அரவிந்த் ஸ்ரீநிவாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், இன்றைய AI உதவியுடன் மகாபாரத கதையை தயாரிக்க விரும்புவதாகவும், இதற்கான பட்ஜெட் எவ்வளவு இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, பிரபல பாலிவுட் இயக்குனர் சேகர் கபூர் பதிலளித்துள்ளார்.
“மகாபாரதம் என்பது ஒரே ஒரு கதை சொல்லும் வடிவமாக இருக்கக் கூடாது. பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய கதாபாத்திரங்களின் குழுவாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரின் X உரையாடல், ஆயிரக்கணக்கான மக்களின் கவனத்தை பெற்றுள்ளது. பலர் இந்த புதிய முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு படம் எடுக்கப்பட்டால், எந்த ஒரு நடிகர், நடிகையும் தேவையில்லை. இயக்குனர் மட்டும் இருந்தால் போதும், மற்றதெல்லாம் AI டெக்னாலஜி நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள். இது ஒரு அற்புதமான யோசனை என்றும், இந்தியாவில் இதிகாச கதைகளை கண்டிப்பாக இப்படமாக்க வேண்டும் என்றும் பலர் கமெண்ட் பகுதியில் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், அரவிந்த் சீனிவாசனுக்கு சில இயக்குனர்களின் பெயர்களும் பரிந்துரையாக வழங்கப்பட்டுள்ளன. பாகுபலி புகழ் எஸ். எஸ். ராஜமௌலி, லார்டு ஆப் த ரிங்ஸ் புகழ் பீட்டர் ஜாக்சன், இன்செப்ஷன் புகழ் கிறிஸ்டோபர் நோலன், அவதார் புகழ் ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரை இயக்குனராக தேர்வு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், மகாபாரத கதையுடன் உண்மையாக இணைவதற்கேற்ப ஒரே சரியான தேர்வு எஸ். எஸ். ராஜமௌலி மட்டுமே என்றும், அவரை இயக்குனராக தேர்வு செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
“கேம் ஆஃப் த்ரோன்ஸ் பத்து சீசன்கள் கொண்டிருந்தது. அதே மாதிரி மகாபாரதத்தையும் 10 சீசன்களாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு சீசனும் 10 எபிசோடுகளாக, ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்க வேண்டும். மொத்தம் 100 மணி நேரம் கொண்ட ஒரு பிரமாண்டமான படமாக உருவாக வேண்டும்” என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனால், மகாபாரதத்தின் அனைத்து அம்சங்களும் ஒருங்கிணைக்கப்படும். மேலும், இது பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பேசப்படும் ஒரு திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.