‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் சமையலறை பெண்களுக்கு எப்படிப்பட்ட சிறைச்சாலை என்பதை தோலூரித்து காட்டியது. அந்த படத்தின் இயக்குனர் ஜியோ பேபி இயக்கும் ஏழாவது படம் தான் ‘காதல் தி கோர்’.
மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் தயாராகி இருக்கும் இந்தப்படம் நவ.23ல் ரீலிஸாக உள்ளது. ஜோதிகா கடைசியாக நடித்த மலையாளப் படம் ‘சீதா கல்யாணம்’ ஜெயராமுடன் இணைந்து நடித்திருப்பார். 12 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் மலையாள சினிமாவில் காலடி வைக்க உதவப்போகும் படம்தான் காதல் தி கோர்.
வழக்கமாக ஜியோ பேபி இயக்கும் படங்களின் கதை அவருடைய கதையாகவே இருக்கும். இந்நிலையில், காதல் தி கோர் படத்தின் கதையை அதர்ஷ் சுகுமாரன் மற்றும் பவுல்சன் ஸ்காரியா எழுதியிருக்கிறார்கள். படத்தின் கதை ஜியோ பேபிக்கு பிடித்து போனதால், தானே இயக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
இந்தப்படத்தினை மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். மம்முட்டிதான் இந்தபடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜியோ பேபி. மம்முட்டியின் மனைவி கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசித்த போது, ஜோதிகாவை பரிந்துரை செய்திருக்கிறார் மம்முட்டி.
ஜியோ பேபி தினசரி வாழ்வியலில் நடக்கும் பிரச்சனையை அழகாக படம் பிடித்து காட்டுவார் என்று உணர்த்திய படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். அதேபோல ‘காதல் தி கோர்’ படத்தின் கதையும் எதே ஒரு கதையை அழுத்தமாக சொல்லப்போகிறது என்று நம்பமுடிகிறது.
படத்தின் டிரெய்லர் நவ.14 தேதி வெளியானது அதை பார்க்கும் போது, தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளராக வருகிறார் மம்முட்டி. அவர் ஏற்கனவே ஒரு சிக்கலில் இருப்பதும் அது தேர்தலுக்கு எப்படி இடையூறாகிறது என்பது மாதிரியான கோணத்தில் செல்கிறது. படத்தின் தலைப்புக்கு ஏற்ற வகையில் காதல் காட்சிகள் ஏதும் இல்லை.
ஒருசில காட்சிகளில் மட்டுமே ஜோதிகா வருகிறார். படத்தின் சுவாரசியத்தை கெடுத்து விடக்கூடாது என்பதற்காக மம்முட்டி ஜோதிகாவுக்கான காட்சிகள் ஏதும் இல்லை போல. படம் வந்த பின் தான் தெரியும் கணவன் மனைவிக்கு இடையேயான தடைப்பட்டு போன காதலை பற்றிய படமா? அல்லது வெறும் அரசியல் படமா என்று பொருத்திருந்து பார்ப்போம்!