தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகராக அல்லது நடிகையாக, அல்லது இயக்குனர், ஒளிப்பதிவாளர் என ஏதாவது ஒரு துறையில் தடம் பதிக்கும் கலைஞர்களின் வாரிசுகளும் கூட அதே வழியில் சினிமாவுக்குள் நுழைந்து மிக பெயரை எடுப்பார்கள். அந்த வகையில், காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வரும் வித்யூலேகாவின் தந்தை தான் நடிகர் மோகன் ராமன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம் தான்.
நடிகர் மோகன் ராமன் ஒரு நடிகர் மட்டுமின்றி எழுத்தாளராகவும், தேசிய விருது தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர். இவர் வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியான வி பி ராமன் அவர்களின் மகன். ஆரம்ப காலத்தில் இந்து பத்திரிகையில் எழுத்தாளராக இருந்த மோகன் ராமன், அதன் பிறகு தேசிய விருது வழங்கும் குழுவில் உறுப்பினராக இருந்து சிறந்த படங்களை தேர்வு செய்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் நடித்த இவர் சின்னத்திரையில் தனது முத்திரையை பதித்துள்ளார். மேலும் தமிழ் சினிமா கண்ட சிறந்த குணச்சித்திர நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் மோகன் ராமன் முதன் முதலாக முரளி நடித்த ’இதயம்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் டாக்டராக நடித்திருப்பார். தொடர்ந்து ’என்றும் அன்புடன்’ என்ற படத்தில் நாயகி சித்தாராவுக்கு அப்பாவாக நடித்திருந்தார். அதன் பிறகு கமல்ஹாசனின் ’மகாநதி’ திரைப்படத்தில் அவருக்கு ஒரு சிறந்த கேரக்டர் வழங்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மோகன் ராமனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. நாயகன், நாயகயின் அப்பா, வழக்கறிஞர், நீதிபதி, காவல்துறை அதிகாரி, அரசியல்வாதி போன்ற பல கேரக்டரில் நடித்தார். விஜயகாந்த் நடித்த பதவிப்பிரமாணம் என்ற படத்தில் தமிழக கவர்னர் கேரக்டரில் நடித்திருந்ததுடன் பல படங்களில் கலெக்டர் கேரக்டரிலும் நடித்து அசத்தி இருப்பார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ’க/பெ ரணசிங்கம்’ திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்த மோகன் ராமனின் குடும்பத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் இருந்ததால் அவருக்கு வழக்கறிஞர்கள் கேரக்டர் தான் அதிகம் கிடைத்தது என்பதும் அவர் கிட்டத்தட்ட 10 அல்லது 15 படங்களுக்கு மேல் வழக்கறிஞர் கேரக்டரில் நடித்திருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் நடிப்பில் அசத்தி இருப்பார். அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அனிருத்த பிரம்மராயர் என்ற கேரக்டரில் நடித்திருப்பார் மோகன் ராமன்.
மேலும் அவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்தார். குறிப்பாக ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் மோகன் ராமன் ஒரு கிராமத்து சாமியாராக நடித்திருப்பார். தெலுங்கில் சில படங்கள் நடித்த அவர் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்தார்.
ஷாருக்கான் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’உயிரே’, ‘தோனி’ ’புலன் விசாரணை 2’ உள்பட ஒரு சில படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 1995 ஆம் ஆண்டு மர்மதேசம் என்ற சீரியலில் அவர் மனநல மருத்துவராக நடித்திருப்பார். மர்ம தேசம் விடாது கருப்பு தொடரிலும் நடித்திருப்பார். காதல் பகடை, சித்தி, நம்பிக்கை, ஆசை, ஆனந்தம், சிதம்பர ரகசியம் உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது 67 வயதில் இருக்கும் மோகன் ராமன் இன்னும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ’பிச்சைக்காரன் 2’ படத்தில் கூட அவர் அரசு வழக்கறிஞராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.