இந்த காலத்தில் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்தியில் ஏராளமான டிமாண்டுகளை வைத்து பணம் பார்க்க, அந்த காலத்து நடிகை சுகன்யா செய்த ஒரு அர்ப்பணிப்பை பற்றி தற்போது பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதால் நடன வீடியோக்கள் மற்றும் நடிப்பு வீடியோக்களை பகிர்ந்து பலரும் ஏராளமான ரசிகர்களை தங்கள் வசம் வைத்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான மக்களிடம் சென்றடைவது எளிதாக இருக்கும் சூழலில் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அவர்கள் ஏதோ மிகப்பெரிய பிரபலம் மாதிரி காட்டிக் கொள்கிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் கிடைத்த பெயரால் ஒரு சில திரைப்படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துவிட்டு பல நடிகர், நடிகைகள் போடும் பில்டப்பே அதிகமாக இருக்கும் நிலையில் சுகன்யா செய்த செயலால் தயாரிப்பாளர் அசந்து போய் உள்ளார்.
குணா திரைப்படத்தை இயக்கிய சந்தான பாரதி இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சின்ன மாப்ளே. இதில் பிரபு நாயகராக நடிக்க அவருடன் சேர்ந்து சிவரஞ்சனி, சுகன்யா, ராதாரவி, வினு சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் , இளையராஜா இசையமைத்த இந்த திரைப்படத்தை டி சிவா தயாரித்து இருந்தார்.
இந்த நிலையில் நடிகை சுகன்யா செய்த ஒத்துழைப்பு பற்றி படத்தின் தயாரிப்பாளர் டி சிவா ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்தை தற்போது பார்க்கலாம். “இன்று இருக்கும் சின்ன சின்ன கேரக்டர் நடிகர்களிடம் இருந்து கூட அப்படி ஒரு ஒத்துழைப்பை நம் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் சுகன்யா செய்தது அப்படிப்பட்ட ஒரு காரியம்.
சின்ன மாப்ளே படத்தின் ஷூட்டிங் கோபி செட்டிபாளையத்தில் நடைபெற அங்கே ஒரே ஒரு ஹோட்டல் தான் இருந்தது. அங்கே நான்கு ஏசி அறை மட்டுமே இருந்த நிலையில் இன்னொரு திரைப்படக் குழுவினரும் அங்கே வந்ததால் ஏதோ குழப்பத்தின் பெயரில் எங்களுக்கு சரியான அறைகள் கிடைக்கவில்லை.
அது மட்டும் இல்லாமல் சாதாரண அறையும் கிடைக்காமல் போக புதிதாக கட்டி முடித்த அறையை கொடுத்து விட்டனர். மேலும் அங்கே ஜன்னல் கூட போடப்படாமல் அனைத்தும் ஓப்பனாக, வேலை முடியாமல் இருந்த நிலையில் சுகன்யா தங்க வேண்டும். இல்லை என்றால் எங்கும் தங்க முடியாது என ஒரு இக்கட்டான சூழல்.
அப்போது சுகன்யாவின் தாய், தந்தை இருவரும் இருந்தனர். அவர்களிடம் இந்த ஒரு அறை தான் இருக்கிறது என கூறவே நாங்கள் அட்ஜஸ்ட் செய்து தங்கிக் கொள்கிறோம் என கூறியதுடன் ஓப்பனாக இருந்த அனைத்து ஜன்னல்களையும் தங்களிடம் இருந்த உடைகளை வைத்து அடைத்துக் கொண்டு அங்கே அந்த ஒரு ஷெடியூலை முடித்துக் கொடுத்தனர்” என் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.